‘நீட் தேர்வை ரத்து செய்’ என்ற முகக்கவசம் அணிந்து சட்டமன்றத்துக்கு வந்த ஸ்டாலின் – திமுக எம்எல்ஏக்கள்…

சென்னை: தமிழக சட்டமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று கலைவாணர் அரங்கத்தில் தொடங்கிய நிலையில்,  ‘நீட் தேர்வை ரத்து செய்’ என்ற முகக்கவசம் அணிந்து எதிர்க்கட்சித் தலை வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உள்பட  திமுக எம்எல்ஏக்கள் வருகை தந்தனர்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக சட்டமன்றம் கூட்டப்படாமல் இருந்து வந்தது.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திமுகவினரின் கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து, கடந்த  மார்ச் மாதம் சட்டப்பேரவை கடைசியாக கூடியது.

அதன்படி, தற்போது, சட்டப்பேரவை கூடியது. 3 நாட்கள் மட்டுமே கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல்நாள் கூட்டம் தொடங்கியது. அதையடுத்து, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சபை ஒத்தி வைக்கப்பட்டு, நாளை மீண்டும் கூடுவதாக அறிவிக்கப்பட்டது.

இன்றைய கூட்டம், கொரோனா பரவல் காரணமாக, தனிமனித இடைவெளியுடன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

முன்னதாக சட்டமன்றத்துக்கு வருகை தந்த எம்எல்ஏக்கள், ஒருவருக்கொருவர் கைகுலுக்கியும், சமுக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்தது, அதிகாரிகள் மற்றும் காவல்துறை யினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

சட்டமன்ற கூட்டத்துக்கு வருகை தி.மு.க தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏக்கள். “நீட் தேர்வை ரத்து செய்” என்று வசனம் பொருந்திய முகக்கவசம் அணிந்துகொண்டு கலைவாணர் அரங்கத்தினுள் சென்றனர். முன்னதாக அவர்கள் அனைவரும் கலைவாணர் அரங்க வளாகத்தில் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தது, கொரோனா  குறித்த அச்சம் இல்லை என்பதே தெளிவுபடுத்தியது.  அரசு அறிவுறுத்தி உள்ள சமூக விலகளை காற்றில் பறக்கவிட்டபடி ஒன்றுகூடி நின்றது சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய எம்.எல்.ஏ-க்கள் குறைந்தபட்சம்  மக்கள் பார்க்கும் இடங்களிலாவது சமூக இடைவெளியைக் கடைபிடித்திருக்கலாம்..