சென்னை:

மிழக சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து அரசு அறிவித்தபோது, தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் நிலவி வரும் சூழ்நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு தேவையில்லை என்று திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அதன்படி கடந்த சில மாதங்களாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பழைய சம்பளத்தையே பெற்று வருவதாக திமுக, தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.

அதில், போக்குவரத்து தொழிலாளர் ஊதிய உயர்வின்மை, மோசமான தமிழக நிதிநிலை, விவசாயிகள் பரிதவிக்கும் போது ‘திமுக MLAக்கள் சம்பள உயர்வை புறக்கணிப்பதாக’ செயல்தலைவர் தளபதி தெரிவித்ததன்படி. சம்பள உயர்வை புறக்கணித்து பழைய ஊதியத்தையே பெறும் திமுக உறுப்பினர்கள்! என்றும் மக்கள் நலனில் #DMK  என்றுகூறி உள்ளது.

இது மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் விவாதிக்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 100 சதவிகித சம்பள உயர்வு அளிப்பதாக கூட்டத்தொடரின்போது அறிவிக்கப்பட்டு  நிறைவேற்றப்பட்டது.

அப்போது நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய ஸ்டாலின்,  திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு தேவை இல்லை என   தெரிவித்தார்.

இந்த விவாதத்தின் போது மு க ஸ்டாலினும் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் காரசாரமாக மோதிக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.