திருச்செந்தூர்: கொரோனா காலத்தில் ஆளும் அதிமுக அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் அவர்களின் சொந்த லாபத்திற்காகவே செய்து வருவதாக திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டி உள்ளார்.

திருச்செந்தூர் அருகிலுள்ள தண்டுபத்து கிராமத்தில் நடைபெற்ற தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில், கலந்துகொள்ள தூத்துக்குடியில் இருந்து தண்டுபத்துக்கு அவர் சென்றார். அப்போது, மணப்பாடு கடற்கரைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

மணல்திட்டுகளால் மீன்பிடிப்பதிலுள்ள சிரமங்கள் குறித்து மீனவர்கள்  கனிமொழியிடம் விளக்கினர். பின்னர், தூண்டில் பாலம் அமைப்பது ஒன்றே இதற்கு நிரந்தர தீர்வாகும் என்றும் கூறினர். பின்னர், மீனவர் ஒருவரின் படகில் ஏறிய கனிமொழி, முகத்துவாரம் வரை படகில் சென்று மணல் திட்டுகளைப் பார்வையிட்டார்.

பின்னர், இது குறித்து ஆட்சியரிடமும், மீன்வளத்துறை அமைச்சரிடமும் தூண்டில் பாலம் குறித்த கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து பேசுவதாகவும் உறுதி அளித்தார். பின்னர், திருச்செந்தூர் அருகே தண்டுபத்து கிராமத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் கனிமொழி பேசிய போது, கொரோனா காலத்தில் அ.தி.மு.க. அரசு மேற்கொள்ளும் திட்டங்கள் அனைத்தும் அவர்களின் சொந்த லாபத்திற்காகவே செய்து வருவதாக குற்றம்சாட்டி உள்ளார்.