சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம்  திமுக விருப்ப மனு வாங்கி வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி விருப்ப மனு கொடுத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணிகளை உருவாக்கி வருகிறது. திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்டணியும் உருவாகி வருகிறது.

கடந்த மாதம் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த தொழிலாளர் குடும்பத்தினர்  கனிமொழியிடம் மனு கொடுத்தபோது எடுத்த படம்  (பைல் படம்)

அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி நிர்வாகிகளிடம் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவித்து  வசூல் வேட்டையிலும் இறங்கி உள்ளது. இந்த நிலையில், திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி  அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்துள்ளார்.

இதுவரை தேர்தலை சந்திக்காமல், மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த கனிமொழி, இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்களாகவே தூத்துக்குடி பகுதியில் சுற்றி வந்த கனிமொழி, அங்கு நடைபெற்ற கிராம சபா, ஊராட்சி சபா கூட்டங்களிலும் பங்கேற்று மக்களின் ஆதரவை கோரி வந்தார். அப்போதே, கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது கனிமொழி தூத்துக்குடி தொகுதியை கேட்டு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.