உளவுத்துறையினர் மிரட்டினர்: மக்களவையில் திமுக எம்பி கதிர் ஆனந்த் பரபரப்பு புகார்

டெல்லி: உளவுத்துறையினர் தம்மை மிரட்டியதாக திமுக எம்பி கதிர் ஆனந்த் புகார் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் திமுகவின் புதிய உறுப்பினரான கதிர் ஆனந்த் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் புகார் மனு ஒன்றினை அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:

தான் தங்கியிருக்கும் தமிழ்நாடு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் 2 பேர் தனக்கு மிரட்டல் விடுத்தனர். மேலும், தங்களை உளவுத்துறையினர் என கூறிக்கொண்டனர்.

இன்று மக்களவையில் விவாதிக்க இருக்கும் நடவடிக்கைகள் குறித்து கேட்டு அறிந்து கொள்ள முற்பட்டனர். ஒரு மக்களவை உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? என்று தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியினரும் போலீசார் அத்துமீறி நடப்பதாக குற்றம் சாட்டினர். புகார்களை எழுத்துப்பூர்வமாக பாதிக்கப்பட்டவர்கள் எழுதி கொடுக்குமாறு சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவு பிறப்பித்தார்.