சென்னை:

ஜெ. மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் டிடிவி தினகரன் களமிறங்கினார். அப்போது, வாக்குக்காக  ஏராளமான பணம்  விநியோகப்பட்டது. இதன் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்.பி. இந்திய தேர்தல் ஆணையம் மீண்டும் புகார் மனு அளித்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றபோது, அ.தி.மு.க. சார்பில் டிடிவி தினகரன் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அப்போது, தேர்தலில் பணம் இறைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.இதையடுத்து, தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்தநிலையில், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணம் விநியோகிக்கப்பட்டது தொடர்பாக, தி.மு.க. முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, தேர்தல் ஆணையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார்.

அந்த மனுவில், “ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் 2017 ஏப்ரல் மாதம் நடைபெற இருந்தது. அந்த சமயத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடந்த வருமான வரித் துறை சோதனையில் பணப்பட்டுவாடா தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அமைச்சர்களின் பெயரும் அதில் இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து சிபிஐ விசாரணை கோரி ஆளுநரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் மனு அளித்தார்.

இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்டத் தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, அதுகுறித்து எஃப்ஐஆரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாநில காவல் துறையின் கூட்டுச் சதியால் அந்த எஃப்ஐஆரை உயர் நீதிமன்றம் ரத்துசெய்துவிட்டது. ஆளுங்கட்சியின் சட்டவிரோத செயல்களையும், குற்றங்களையும் தலைமை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கக் கூடாது. எனவே, முதல்வர், அமைச்சர்கள், மாநில காவல் துறை மற்றும் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

இதையடுத்து  செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு, “முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இல்லையெனில் உச்ச நீதி மன்றத்தை அணுகியிருக்க வேண்டும். அதுவும் இல்லையா புதிதாக ஒரு புகார் மனுவையாவது அளித்திருக்க வேண்டும். இந்த 3 ஆண்டுகளில் இதுவரை 4 முறை தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்திருக்கிறோம். ஆனால் எதுவுமே செய்யவில்லை, ஆகவே மீண்டும் ஒரு புகார் மனு அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருக்கிறோம்” என்று தெரிவித்தார். இதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனையை எழுப்புவோம் என்றும் கூறினார்.