திமுக எம்.பி.க்கள் ஸ்டாலின் தலைமையில் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை

சென்னை:

டைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி போட்டியிட்ட 38 தொகுதிகளில் 37 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதில் 20 இடங்களில் போட்டியிட்ட திமுக அனைத்து இடங்களிலும் அபார வெற்றியை பெற்றுள்ளது.

இந்த நிலையில், தேரதலில் வெற்றி பெற்ற 20 திமுக எம்.பி.க்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்திலும், அண்ணாவின் நினைவிடத்திலும் மலர் வளையம்  மரியாதை செலுத்தினர். பின்னர் வேப்பேரி சென்று பெரியார் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினர்.

தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு பேரணியாக சென்றார். அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்துக்கு சென்ற ஸ்டாலின் அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திமுக தலைமையிலான கூட்டணி, மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை அடுத்து, பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக  மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர்கள், டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலை இல்லத்தில், மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதனைத் தொடர்ந்து, திமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த மு.க.ஸ்டாலினை, கனிமொழி, ஆ.ராசா, திருவண்ணாமலை அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி கெளதம சிகாமணி, கலாநிதி வீராசாமி, ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன் உள்ளிட்ட வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், அக்கட்சியின் சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சின்ராசு ஆகியோர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துகளை பறிமாறிக் கொண்டனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மு.க.ஸ்டாலினை சந்தித்து, வாழ்த்து தெரிவித்தனர். திரைப்பட பாடல் ஆசிரியரும், கவிஞருமான வைரமுத்து மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இவர்களைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் நின்று வென்ற ரவிக்குமாருடன் சென்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் அக்கட்சியின்சார்பில் வெற்றி பெற்ற சுப்பராயன், செல்வராசு ஆகியோர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோன்று, பீட்டர் அல்போன்ஸ், அதியமான், உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகளும், மக்களவைத் தேர்லில், திமுக அமோக வெற்றிப்பெற்றதை அடுத்து, தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். புதிதாக எம்.பிக்களாக தெரிவானவர்களும், மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மற்றும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர்களுடன் சென்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர். கரூர் ஜோதிமணி, கிருஷ்ணகிரி செல்லகுமார், ஆரணி விஷ்ணுபிரசாத், திருவள்ளூர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நின்று வெற்றிப்பெற்ற வைத்தியலிங்கத்துடன் சென்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, முதலமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்தார். அப்போது, புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்தியலிங்கத்திற்கு, மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், தேர்தலில், அக்கட்சியின் சார்பில் தெரிவான, மதுரை சு.வெங்கடேசன், கோயம்புத்தூர் நடராஜன் உள்ளிட்டோர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, வாழ்த்துத் தெரிவித்தனர்.

இவர்களைத் தொடர்ந்து, இந்திய ஜனநாயக கட்சி தலைவரும், பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து, எஸ்.ஆர்.எம் குழுமங்களின் தலைவர் ரவிபச்சமுத்து, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் திமுக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டனர்.

மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் வெற்றிப்பெற்ற, தென்காசி தொகுதி தனுஷ் குமார், ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் நவாஸ் கனி, பொள்ளாச்சித் தொகுதி புதிய எம்.பி சண்முகசுந்தரம், கடலூர் ரமேஷ், தஞ்சாவூர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தருமபுரி செந்தில்குமார் உள்ளிட்ட, தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.