8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரி திமுக எம்.பி.க்கள் நிதின்கட்கரியிடம் மனு!

டில்லி:

பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சென்னை  சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை கைவிடுமாறு மத்திய போக்குவரத்துத் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து திமுக எம்.பி-க்கள் மனு கொடுத்தனர்.

சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தின்படி, தமிழகஅரசு நிலம் கையப்படுத்தும் வகையில் பிறப்பித்த அரசாணையை  சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்துள்ளது. இருந்தாலும், அந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன.

இதுதொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில்,  சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடுமாறு டில்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து திமுக  எம்.பி-க்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இந்த சந்திப்பின்போது, திமுக மக்களவை உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், கவுதம் சிகாமணி, செந்தில்குமார்,  அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, சேலத்தில் அதிமுக வேட்பாளர்  சரவணணை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு சேலம்-சென்னை  8 வழிச்  சாலை திட்டம் மிக முக்கியமானது  என்றும், அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று பேசியது குறிப்பிடத்தக்கது.