திமுகவுக்கு நானும், எனது குடும்பமும் நன்றி உடையவர்களாக இருப்போம்: பொதுக்குழுவில் துரைமுருகன் உருக்கம்

சென்னை: என்னை வளர்த்து ஆளாக்கியவர் கலைஞர் என்று திமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுக்குழுவில் 13 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் துணைப் பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இந் நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்  பொதுக்குழுவில் பேசியதாவது: என்னை வளர்த்தவர் எம்ஜிஆர்- கருணாநிதி, என் தலைவர் கருணாநிதி. என்னை கட்டிப்பிடித்துக் கொண்டு பாராட்டியவர் எம்ஜிஆர்.

இந்தியை திணிப்போம் என ஆக்ரோஷமாக வந்திருப்பவர்களை நாம் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். எனது குடும்பம் எப்போதும் திமுகவுக்கு நன்றி உள்ளதாக இருக்கும்.

திமுகவை நினைக்கும் போது எனக்கு இமயமே ஒரு தூசாகத்தான் தெரியும். நான் மறைந்துபோனதற்கு பிறகும் கூட என் குடும்பம் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று பேசினார்.