சென்னை,

டப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த ஓபிஎஸ் மற்றும் மா.பா.பாண்டியராஜன் எப்படி அமைச்சர்களாக செயல்பட முடியும் என திமுக எம்எல்ஏ பிச்சாண்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் புதிய வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக இரு அணிகளாக உடைந்தது. சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டார். இதைத்தொடர்ந்த சசிகலா ஆதரவு எடப்பாடி முதல்வராக பதவி ஏற்றார். அதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம்  நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அதிமுக கொறடா உத்தரவை மீறி  ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள், எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

பின்னர் இரு அணிகளும் இணைந்ததை தொடர்ந்து ஓபிஎஸ் துணை முதல்வராகவும், மா.பா.பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகின்றனர்.

இதையடுத்து, எடப்பாடிக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்தற்காக, கட்சி கொறடா பரிந்துரையின் பேரில் 18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில்  திமுக எம்.எல்.ஏ பிச்சாண்டி உயர் நீதிமன்றத்தில்  புதிய  வழக்கு ஒன்றினை தொடர்ந்துள்ளார். அதில் அவர் கட்சிக் கொறடா உத்தரவினை மதிக்காமல், அரசினை எதிர்த்து வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் ‘மாஃபா’ பாண்டியராஜன் இருவரும் எப்படி அமைச்சர்களாக செயல்பட முடியும்? இவர்கள் இருவரும் அமைச்சராக செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கில் தமிழக ஆளுநர் மற்றும் சட்டப் பேரவை செயலர் இருவரும் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளார்.

விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.