சிறப்புக்கட்டுரை: உடன்பிறப்புகளுக்கு கடைசிவரை கதறல்தானோ?

கட்டுரையாளர்: ஏழுமலை வெங்கடேசன்

31 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்துபோன ஒரு மக்கள் தலைவனை, மீண்டும் ஒருமுறை அவரின் குரல் வளத்தை கேலிசெய்து குதூகலப்பட்டு வருகிறது மனநிலை பிறண்ட கோஷ்டி.. அதையும் ஷேர் செய்து புளங்காகிதம் அடையும் நிலைக்கா போகவேண்டும் உடன் பிறப்புகள் என்பதுதான் இங்கே கேள்வி. எம்ஜிஆர்மேல் அவ்வளவு வெறுப்பா இன்னமும்..அடப்பாவமே..

எம்ஜிஆர் சுடப்படாத காலகட்டம் வரை 92 படங்கள் நடித்தார். அனைத்திலும் அப்படியொரு கம்பீரத்துடன் அவரின் குரல் ஒலித்தன. 1967ல் சுடப்பட்டு குரலை இழந்தபோது வசூல் சக்ரவர்த்தியான அவரின் சினிமா பயணம் அதோடு முடிந்தது என்று எகத்தாளம் இட்டனர் அரசியலில் எதிர் கேம்ப்பில் இருந்த காங்கிரஸ்காரர்கள்.

டப்பிங் வைத்துக்கொள்ளலாம் என்று பலரும் எம்ஜிஆருக்கு யோசனை சொன்னார்கள். ஆனால் அவரோ என் குரல் எப்படியிருந்தாலும் எந்த அளவுக்கு மோசமாக இருந்தாலும் என்னை நேசிக்கும் மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வர்கள், மாற்றுக்குரல் வைத்து அவர்களை ஒரு போதும் ஏமாற்றவிரும்பவில்லை என்று எம்ஜிஆர் உறுதியாக சொல்லி அதன்படியே தன் குரலில்தான் பேசினார்.  தொண்டையில் சிக்கிய துப்பாக்கி குண்டு அப்படியே உள்ளே இருக்கையிலேயே எம்ஜிஆர் படங்களில் பேசினார்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், எம்ஜிஆர் படங்களில் வசூலை தாறுமாறாய் வாரிக்குவித்த பிளாக் பஸ்டர் படங்களில் அதிக அளவு, அவர் குண்டடிபட்ட பின்னர் பேசி வெளிவந்தவை என்பதுதான்.

காவல்காரன், குடியிருந்தகோவில், ஒளிவிளக்கு, அடிமைப்பெண், நம்நாடு,  மாட்டுக்காரவேலன், எங்கள் தங்கம், ரிக்சாக்காரன், உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல் இதயக்கனி என அந்த பட்டியல் போய்க்கொண்டிருக்கும். இது தெரியாத உடன்பிறப்புகள்தான் எம்ஜிஆர் வாய்ஸ் மீம்சில் நக்கல் புத்தியை காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

எம்ஜிஆர் சுடப்பட்டதை வைத்தேதான் 1967 தேர்தலில் திமுக வாக்குகேட்டு மக்களின் அனுதாபத்தை ஆட்சிக்கட்டிலாக மாற்றிக்கொண்டது என்பது தெரியாதுபோல. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஒரே தலைவர் கலைஞர். அவரைப்போல அறிவாளியோ, சாதனையாளரோ வேறு யாருமே கிடையாது. கலைஞருக்கு எதிரானவர்கள் வெறும் தக்காளி தொக்குதான்

கலைஞர் மாதிரி ஒரு உழைப்பாளியை நிச்சயம் பார்க்கமுடியாது என்பார்கள் உடன்பிறப்புகள்.. வாஸ்தவம்தான்.. அவரின் சாதனைகள் பிரமிப்பானவை. 20 வயதில் சினிமா வசனகர்த்தாவாகி பெரும் தொகையை சம்பளமாக வாங்கியவர். பராசக்தி, மலைக்கள்ளன் என தமிழ்சினிமா வரலாற்றில் சரித்திரம் படைத்த படங்களிலெல்லாம் ஹீரோ பேர் போடுவதற்கு முன் வசனகர்த்தாவான கலைஞரின் பெயரைத்தான் போடுவார்கள்.

 

எம்ஜிஆர், சிவாஜி என்ற இருபெரும் திலகங்களுக்கு ஏற்றம் தந்தது கலைஞரின் வசனங்கள்தான். 1951- லேயே வசனத்திற்காக ஒரு காரையே தயாரிப்பாளரிடமிருந்து பரிசாக பெற்றதும் கலைஞர்தான். .

பல எம்ஏக்கள் நிறைந்த திமுக தலைவர்கள் வட்டாரத்தில் பள்ளிப்படிப்பையே முடிக்காமல், பத்திரிகை அரசியல், நாடகம், சினிமா, இலக்கியம் என பல துறைகளில் கொடிகட்டிப்பறந்தவர் கலைஞர்.. இதையெல்லாம் யாரும் மறுக்கவே முடியாது. இதைச்சொல்லி சொல்லி திமுக தொண்டர்களை தயார் செய்தவர்கள் மற்றவர்களும் கில்லாடிகள் என்பதை சொல்ல மறந்துவிட்டார்கள்..

பொதுவாக, திராவிட இயக்க வரலாறு பேசுபவர்கள் திமுக என்றால், அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன், ஈவிகே சம்பத், கே.ஏ.மதியழகன், அன்பழகன், நாஞ்சிலார். சிபி. சிற்றரசு, ஆடலரசு என்றெல்லாம் தலைவர்களை பெருமைபடுத்தி பேசுவார்கள். அவர்கள் கணக்குப்படி நிறைய படித்திருக்கவேண்டும், எழுதியிருக்கவேண்டும், மேடைகளில் மணிக்கணக்கில் பேசவேண்டும் ஆனால் திமுகவில் இருந்தாலும் கே.ஆர். ராமசாமி, எஸ்எஸ். ராஜேந்திரன், சிவாஜி, எம்ஜிஆர் ஆகியோரையெல்லாம் வெறும் நடிகர்கள் என்ற ரேஞ்சில்தான் வைத்திருப்பார்கள். சீனியர்களே பட்டியலில் வராதபோது  அப்போதைய சோட்டா பீம் எம்ஜிஆர் எப்படி வருவார்?..

இப்படி கிள்ளுக்கீரையாய் கருதப்பட்டதால்தான் திமுக அனுதாபியாக இருந்து  பல படங்களில் பகுத்தறிவுபேசிய நடிகர் திலகம் சிவாஜிகணேசன், மனம் வெறுத்துப்போய் காங்கிரஸ்பக்கம் போனார்.

எம்ஜிஆர் என்றால் திமுக வரலாற்று நூல்களில், பல தலைவர்களோடு அவ்வப்போது வந்து பழகிவிட்டுசென்ற ஒரு சின்ன கேரக்டர் என்றே சித்தரிப்பார்கள். இன்னும் சில திராவிட ஸ்பெஷலிஸ்ட்டுகள், பிம்பச்சிறை, பிருந்தா தலை நரை என்றெல்லாம்கூட துவேசத்தை காட்டினார்கள். .

திமுக வரலாறு என்றால் கருணாநிதியை தவிர வேறு யாருமே கிடையாது என்று எழுதிய ‘வாசிப்பு’ நூலாசிரியர் கும்பல்கள்தான் எத்தனையெத்தனை

பரிதாபம் என்னவென்றால் யார் யாரையெல்லாம் எழுத்துக்களால் தூக்கி நிறுத்தினார்களோ அவர்களில் பலபேர், பிந்தைய அரசியல் வரலாற்றில்  சுயமாக பிரகாசிக்க முடியாமல் போனதுதான். ஆனால் அனைவரின் கணக்கையும் பொய்யாக்கியவர் எம்ஜிஆர் மட்டுமே.

திமுக பெருந்தலைவர்கள்  நாளேடுகளில் எழுதினார்கள். மேடைகளில் பேசினார்கள். எம்ஜிஆர் என்ற நடிகர் அதே திமுக பிரச்சாரத்தை சினிமா கொட்டகைகளில் வெகுசாமர்த்தியமாய் பாமர மக்களிடம் பேசினார்.

சொந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு திமுக கொடியை பிடிக்கும் சின்னம், உதயசூரியன், கதிரவன் என்றெல்லாம் பெயர்களை தன் கதாபாத்திரத்திற்கு வைத்தார். படங்களில் வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள் என எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் சூரியன், கருப்பு சிவப்பு அடையாளங்களை வைத்தார். கதாநாயகிகள் மார்பு கச்சைகள் மேலேகூட உதயசூரியன் எம்ப்ராய்ட்டரி போட்டிருக்கும்.. படத்தில் பத்திரிகை படிப்பதென்றால் முரசொலியை கையில் வைத்திருப்பார். அண்ணாவின் போட்டோக்கள் கண்டிப்பாக ஆங்காங்கே மாட்டியிருக்கும். திமுக மேடைப்பேச்சுகளை தன் படத்தில் வைக்க அவரே தயக்கம் காட்டியதே கிடையாது.

‘’இவன் கூட்டம்போட்டு பேசியே நமது ஆட்சிக்கு எதிராக குழி பறிப்பவன்.. நீ ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும் என்று ஆரவாரம் செய்தவன். கும்பி எரியுது குடல் கருகுது குதூகலம் உங்களுக்கு ஒரு கேடா என்று கேட்டவன்.’’ – காங்கிரசை எதிர்த்து திமுக மேடைகளில் ஒலித்த இந்த பேச்சுகள் அரசகட்டளை படத்தில் அப்படியே இடம்பெற்றன. இதுபோல நிறைய.. சரி எல்லாம் போகட்டும் நேரடி விஷயத்திற்கு வருவோம்.

எம்ஜிஆருக்கு ஓட்டுப்போட்டவர்களெல்லாம் சினிமா மாயைக்கு ஆளான விசிலடிச்சான் குஞ்சுகள் என்பார்கள். அதே எம்ஜிஆர் 1950களிலும் 1960களிலும் திமுகவுக்காக தமிழகம் முழுவதும் வாக்குகேட்டபோது, அவர் ஆக்ஸ்போர்ட்டில் படித்து பல்வேறு பட்டங்களை வாங்கியவரா?

கலைஞர்.. கடுமையான உழைப்பாளி,  பல்துறை வித்தகர், அரசியல் சாணக்கியன், எதிர்ப்புகளை கண்டு துவளாதவர், அரசு நிர்வாகத்தில் அற்புதமான திறமை கொண்டவர் என்பார்கள். யாரும் அதை மறுக்கமுடியாது.

ஆனால், இப்பேர்பட்ட கலைஞர்தான், எம்ஜிஆரின் அதிமுகமுன் சட்டசபை தேர்தல் அரசியலில் வெற்றிபெறவே முடியவில்லை. 1972ல் தனிக்கட்சி கண்ட எம்ஜிஆர், எடுத்தஎடுப்பில் ஏதோ பஞ்சாயத்து வார்டு தேர்தலில் ஜெயிக்கவில்லை. சில மாதங்களில் நடந்த திண்டுக்கல் மக்களவை தேர்தலில்தான் அதிமுகவை களமிறங்கினார்.

கோமாளி நடிகன், அட்டகத்தி பார்ட்டி, மலையாளி, கிழபோல்டு என்றெல்லாம் திமுக தலைவர்களும் திமுக ஆதரவு பத்திரிகைகளும் எம்ஜிஆரை கிழித்தன. அன்னியனுக்கா உங்கள் ஓட்டு என்று முதலமைச்சர் கலைஞரே மேடையில் விளாசினார்.

ஆனால் திண்டுக்கல் வாக்காளர்கள் என்ன செய்தார்கள்? அதிமுகவை ஜெயிக்கவைத்ததோடு ஆளுங்கட்சியான திமுகவை தூக்கி மூன்றாவது இடத்திற்கு வீசி கதறவிட்டார்கள்.

புதுச்சேரி கோவை என அடுத்தடுத்து நடந்த தேர்தல்களிலெல்லாம் திமுகவை அதிமுக புரட்டி புரட்டி எடுத்தது.

1977ல் இருந்து 2016 வரை பத்து சட்டமன்றத்தேர்தல்களை கலைஞர் தலைமையிலான திமுக சந்தித்தது.. ஏழுமுறை அதிமுகவிடம் மண்ணை கவ்வியது இதிலும் ஒரு பரிதாபமான விஷயம் என்னவென்றால் ஒரேயொரு தேர்தல், அதாவது 1996ல் மட்டுமே, ஒன்றுபட்ட அதிமுகவை பெரும்பான்மையுடன் திமுக வீழ்த்தியுள்ளது. 1989ல் அதிமுக இரு அணிகளாக சிதறிப்போயிருந்தது. 2006 தேர்தலில் அதிமுவை மைனாரிட்டியாகத்தான் வீழ்த்தியது. பாமக தயவில் திமுக ஆட்சி ஓடியது..

திராவிட அறிஞர்களால் உச்சத்தில் வைத்து பார்க்கப்பட்ட கலைஞர், அவரால் எகத்தாளமாக நினைக்கப்பட்ட ஒரு நடிகனிடம் மூன்று முறை தொடர்ச்சியாக தோற்றுப்போனார். அதைவிடக்கொடுமை கவர்ச்சி நடிகை என்றும் பால்கனி பாவை என்றும் கொச்சையாக பேசிய ஜெயலலிதாவிடம் நான்கு முறை தோற்றுப்போனார். திமுகவினரை பொறுத்தவரை எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் அரசியல்தலைவர்களே அல்ல.. ஆனால் அவர்களைக்கூட வெல்லவே முடியாமல் உருண்டு புரண்டு கண்ணீர்வடித்தபடியே இருப்பார்கள். என்ன ஒரு வித்தியாசமான டிசைன் இது

கலைஞர் மிகப்பெரிய அறிவாளி.. ஆனால் எம்ஜிஆர். ஜெயலலிதா போன்றோர் புத்திசாலிகள். அறிவாளிகளை வைத்து வேலைவாங்கி வெற்றிக்கொடி நாட்ட புத்திசாலிகளுக்கு மட்டுமே தெரியும்.

காலம்காலமாய் இந்த சூட்சுமம் புரியாமல்தான் திமுக திணறிவருகிறது.. கோளாறு எங்கே என கண்டுபிடிக்கத்தெரியாமல்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவருக்கு பிறகும் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி போன்றவர்களைக்கூட வீழ்த்தமுடியாமல் செய்வதறியாமல் தவிக்கிறது ஸ்டாலின் தலைமையிலான திமுக. பெரும்பான்மை இல்லாத எடப்பாடி அரசைக்கூட அதனால் ஒரு இன்ச் அசைக்கமுடியவில்லை..

எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தை ஏன்டா உன் பொண்டாட்டி உன்னைவிட்டு போயிடிச்சு கேட்டா அதுதான் தெரியலைன்னு சொன்னானாம்.. அந்த கதைதான் ஓடிக்கொண்டிருக்கிறது…

பழைய வரலாறையெல்லாம் ஒரம்கட்டிவிட்டு, முடிந்தால் ஒரேயடியாக மறந்துவிட்டு நடப்பு நிலையைபற்றி மட்டுமே ஸ்டாலின் யோசிப்பது நல்லது.. எங்கே, யாரால் கோளாறு என்பதையெல்லாம் சுயபரிசோதனை செய்து உடன்பிறப்புகளுக்கு நிதர்சன உண்மையை சொல்லி தயார் படுத்துவது ஒன்றே திமுகவுக்கு கைகொடுக்கும்.

இல்லையென்றால், எடப்பாடி என்ன, அவருக்கு பின்னாடி யாராவது வியாசார்பாடி மீன்பாடி பார்ட்டி முதலமைச்சராக வந்தாலும் திமுக அவரையும் எதிர்த்து போராடிக்கொண்டுதான் இருக்கவேண்டும். அப்படியே ஓபிஎஸ், ஈபிஎ பற்றிய மீம்சுகளையும் உடப்பிறப்புகள் ஷேர் செய்து திருப்தி பட்டுக்கொள்ளலாம்.