சென்னை:
மிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவை 5 ஆண்டுகளை முழுமையாகப் பூர்த்தி செய்துள்ளது. 2016-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. அதன் பின்னர் ஜெயலலிதா முதல்வரானார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் 2017-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றார். தற்போது தமிழகத்தில் மே 24-ம் தேதியுடன் ஆட்சி முடிவடைகிறது.

அதேபோன்று புதுவையில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியிலிருந்து எம்எல்ஏக்கள் வெளியேறியதால் பெரும்பான்மை இழந்தது. தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை மற்ற 3 மாநிலங்களின் தேர்தல் தேதி அறிவிப்புடன் சேர்த்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.

அதன்படி தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி அன்று தேர்தல் நடக்கிறது. மே 2-ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.  இந்நிலையில், பிப்ரவரி 17 முதல் 24ஆம் தேதி வரை தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்யலாம் என திமுக அறிவித்தது. இதையடுத்து, தேர்தலில் போட்டியிட திமுகவினர் விருப்பமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்பமனுவை உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார்.  இந்நிலையில், இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.