நான் ஏன் சிறைக்கு சென்றேன்? தருமபுரி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் ஆவேச பேச்சு

தருமபுரி: கொள்ளை, ஊழல் செய்துவிட்டு சிறைக்கு போகவில்லை. மக்கள் நலன்களுக்காக சிறைக்கு சென்றிருக்கிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்திருக்கிறார்.


திமுக பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் விளக்கும் பொதுக்கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மிசா கைது குறித்து சர்ச்சை எழுப்பி பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்தார். அவர் பேசியதாவது:


நான் கொலை, கொள்ளை, ஊழல் செய்துவிட்டு சிறைக்கு போக வில்லை. மக்கள் நலன்களுக்காக சிறை சென்றேன். தியாகம், சிறை, சித்ரவதை என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கு என்னைப்பற்றி பேச தகுதி இல்லை.
இங்கு பொய் சொன்னது போக, லண்டன், அமெரிக்கா சென்று பொய் சொல்கிறார்கள். தற்போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்பது போல என்னை விமர்சிக்கின்றனர்.


காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பது போல் திமுகவை கடுமையாக விமர்சிக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அதிமுக ஆட்சி, மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை யாரும் விமர்சனம் செய்வதில்லை. உலக முதலீட்டாளர்கள் யாருக்கும் இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லை. தமிழக முதலமைச்சர் வேலைவாய்ப்பு திட்டங்களை பொய்யாக அறிவித்து வருகிறார்.


விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார வீழ்ச்சி என மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதை மனதில் கொண்டு மக்கள் நலனுக்கான திட்டங்களை கொண்டு வராவிட்டால் திமுக சிறைநிரப்பும் போராட்டத்தில் இறங்கும் என்று பேசினார்.