சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து, வரும் 17ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேறியது.

இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து வரும் 17ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான, மதச்சார்பின்மை, சம உரிமை, சகோதரத்துவம், சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் குடியுரிமை திருத்த சட்டம் மூலம் தகர்த்துள்ள மத்திய பாஜக அரசுக்கு துணை நின்று, சிறுபான்மையினர் – ஈழத்தமிழர்களுக்கு அதிமுக அரசு மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ளது.

மாநிலங்களவையில் அதிமுக அளித்த ஆதரவு இந்த தமிழர் விரோத குடியுரிமை மசோதா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.

மத்திய பாஜக அரசின் சிறுபான்மையினர் விரோத – தமிழர் விரோத செயல்கள் அனைத்துக்கும் தொடர்ந்து ஆதரவளித்து வரும், தமிழின விரோத அதிமுக அரசை கண்டித்து, திமுக சார்பில் 2019 டிசம்பர் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று மாவட்ட கழக செயலாளர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.