சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில், எதிர்க்கட்சி துணைத்தலைவரம், திமுக முதன்மை செயலாளருமான துரைமுருகன் தமிழக அரசு மீது கடுமையாக சாடினார்.

காவிரி நதி நீர் பிரச்சினையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், மத்திய அரசுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இன்று  செய்தியாளர்களை சந்தித்த திமுக முதன்மை செயலாளரும் எதிர்க்கட்சி துணை தலைவருமான துரைமுருகன்,

தமிழக அரசுமீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். மேலும் இன்றைய ஆலோசனை கூட்டத்தையும் கடுமையாக விமர்சித்தார்.

அவர் கூறியதாவது,

இந்த நேரத்திலே கேபினட்டை கூட்டுறீங்களே…… சிரிக்க மாட்டாங்களா… சாகப்போகிற நேரத்தில் சங்கரா, சங்கரா என்று கூவும் கதையாக, கெடு முடியும் கடைசி நாளான இன்று அமைச்சர்களுடன் ஆலோசிக்கிறார் முதல்வர்.

ஏன்  நேற்றோ முந்தா நாளோ கூட்டியிருந்தால்… போலிசா பிடிச்சுப்போவாங்க… இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்காங்க…

இந்த விவகாரத்தில், அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் முதல்வர், பிரதமரை சந்திக்க நேரம் கேட்டதற்கு பிரதமர் கொடுக்கவில்லை. ஏன் என்று கேட்டால், பிரதமருக்கு நேரமில்லை, நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்துவிட்டு செல்லுங்கள் என்று கூறுவதாக என்னிடமும் தளபதியிடமும் தெரிவித்தார்கள்.

அப்போதும், மற்றவர்களை விடுத்து, முதல்வரும் துணை முதல்வருமாவது சென்று பிரதமரை சந்திருக்கலாம் அல்லவா?

பிரதமரிடம் சென்று, நாங்கதான் வந்துருக்கோம்;  வேறு யாரும் வரலைனு சொல்லி பார்த்திருக்கலாமே? அப்போது தமிழக மக்களக்கு காவிரி மேனேஜ்மென்ட் போர்டு வேண்டும் என்று கூறியிருக்கலாமே என்றார்.

இந்த விவகாரத்தில் சட்ட மன்ற தீர்மானம் மட்டுமே போதுமா? மத்திய அரசுக்கு பிரஷர் கொடுத்திருக்க வேண்டாமா? அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்று பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டிருக்க வேண்டாமா? என்று கேள்வி விடுத்தார்.

ஏனென்றால் இவர்களுக்கு மத்திய அரசை எதிர்க்கும் தைரியம் கிடையாது. காரணம் மத்திய சர்க்காரை எதிர்த்தால் நாளை இவர்கள் மந்திரியாக இருக்க முடியாது. அந்த பயத்தோடுதான் உட்கார்ந்திருக்கிறார்கள்.. கையறு நிலையில் இருக்கிறார்கள்.

பிரதமரை இந்த ஆட்சியாளர்களால் பார்க்கவே முடியவில்லை. பழனிசாமியும் பன்னீர்செல்வமும் சென்றி ருந்தால், இதற்குத்தான் உங்களை ஆட்சி கட்டிலில் அமர வைத்தேனா என மோடி மிரட்டியிருப்பார்…. இருந்தாலும், அதையாவது கேட்டுக்கொண்டு பிரதமரை சந்தித்துவிட்டு வந்திருக்கலாமே? அதைக்கூட செய்யவில்லையே? பிரதமரை சந்திப்பதற்கான எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை என துரைமுருகன் குற்றம்சாட்டினார்.

சாயந்திரம் 5 மணியுடன் கெடு முடிவடைய உள்ள நிலையில், இப்போது போய் கூட்டத்தை கூட்டுவாரா?

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு  பிறகு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்பார்கள் என கூறுவார்கள். வேறு என்ன சொல்லிவிட போகிறார்கள்?

ஸ்கீம்  என்பதற்கு விளக்கம் கேட்டு கடைசி நேரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடும் மத்திய அரசு, இதற்கு முன் கேட்டிருக்க கூடாதா?

மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து தமிழகத்தை ஏமாற்றிவிட்டார்கள். திருட்டுத்தனம் செய்கிறார்கள்.

என்றைக்கு முடியாது என்று மத்திய அரசு சொன்னதோ அன்றே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டாமா?

நாங்கள் ஏற்கனவே தமிழக அரசிடம் கேட்டோம் என்றும், ஆனால், அவர்கள் பார்த்துக் கொள்வதாக கூறினார்கள் என்றார். ஆனால், அவர்களால் முடியாது என்று சொல்லியிருந்தால், இந்த விவகாரத்தில் எங்களால் முடிந்ததை செய்திருப்போம் என்றார்.

 

கடைசி நேரத்திலும் கூட மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என  மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுக்கொள்கிறது என தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, காபி குடித்துவிட்டு வந்துவிடுவார்கள் என முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்தை துரைமுருகன் விமர்சித்தார்.