ஹைட்ரோ கார்பன் திட்டம்: மத்திய மாநில அரசுகளை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் 28ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம்!

சென்னை:

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று அறிவித்துள்ள மத்திய அரசுக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் வரும் 28ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று, மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் மற்றும  மக்களிடம் அனுமதி கேட்கத் தேவையில்லை என்று  மத்தியஅரசு விதிகளை திருத்தி புதிய அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே பல இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பினால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தற்போது, விதிகளை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஆதரவாக மத்திய அரசு அறிவித்துள்ளது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்து உள்ளது.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், , ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு, “சுற்றுச்சூழல் அனுமதி, மக்களின் கருத்து கேட்பு தேவையில்லை” என்ற ஆணையை திரும்பப் பெற வலியுறுத்தியும் – விவசாய நிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் திரும்பப் பெற்று, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென்றும், 2020, ஜனவரி 28 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டத்தலை நகரங்களில், தி.மு.க. சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் மற்றும் விவசாயிகள் – மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் – பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பெருமளவில் கலந்து கொண்டு, ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி