சென்னை:

மிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆளுநர் பதவிக்கு தகுதியற்றவர், அவர் பதவி விலகும் வரை போராட்டம் நடைபெறும் என்று திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மொபைல் போனில் இருந்து  எடுக்கப்பட்ட  ஒலிநாடாவில் ஆளுநருக்கு நெருக்கமானவர்களுடன் தனக்குப் பழக்கமிருப்பதாக நிர்மலா தேவி கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  இந்த விவகாரம் குறித்துவிசாரிக்க அவசரம் அவசரமாக ஒரு நபர் கமிஷன் ஒன்றை அமைத்து ஆளுநர் பன்வாரிலால்  உத்தரவிட்டார்.

விசாரணை கமிஷன் அமைக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், நேற்று மாலை ஆளுநர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, பத்திரிகையாளர்  லட்சுமி சுப்பிரமணியத்தின் கன்னத்தை தட்டிவிட்டு சிரித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று திமுகவினர் ஆளுநரை கண்டித்து, ஆளுநர் மாளிகை நோக்கி திடீர் பேரணி நடத்தினர். ஆளுநர் பன்வாரிலாலை திரும்பப்பெற வலியுறுத்தி நடைபெற்ற இந்த பேரணியில் சுமார்  800-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர்  சென்றனர்.  எம்எல்ஏக்கள் வாகை சந்திரசேகர், மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை சைதாப்பேட்டை அருகே போலீசார் வழிமறித்து கைது செய்தனர்.

ஆளுநரின் செயலுக்கு தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தில்குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுகிறதா என மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆளுநரின் அத்துமீறியல் செயல் காரணமாக சமூக வலைதளங்களில் பன்வாரிலாலே திரும்பிப்போ என்று ஹாஸ்டேக்கும் டிரென்டாகி வருகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ஆளுநர் பொறுப்பில் இருக்க பன்வாரிலால் புரோகித் தகுதியற்றவர் என கடுமையாக விமர்சித்தார்.  மேலும், பெண் நிருபர் கன்னத்தை ஆளுநர் தட்டியது நாகரிகமற்ற செயல் என்றும், எனவே ஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்றும் கூறினார்.