நவம்பர் 16ந்தேதி மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டம்! திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை:

மாநிலம் முழுவதும் நவம்பர் 16ந்தேதி  திமுக பொதுக்கூட்டம் நடத்த இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில்,  “தமிழகம் முழுவதும் நவ.,16ல் தி.மு.க பொதுக்கூட்டம்”  நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், திமுக பொதுக்கூட்டத்தில், திமுக  பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மக்களிடம் விளக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

திமுக பொதுக்குழு கூட்டம் நேற்று  நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்றது. இதில், மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை கண்டித்தும், நாட்டின் வளர்ச்சி குறித்தும் 20 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இதனையடுத்து இன்று காலை  சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தி.மு.க முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஐ. பெரியசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பொதுமக்கள் மத்தியில் எடுத்துச் சென்று விளக்கிட, தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும், மிகச் சிறப்பான பயனளித்திடும் வகையில், நவம்பர் 16ம் தேதி (சனிக்கிழமை) “தி.மு.கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டங்களை” நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், “பொய்களைச் சொல்லியே பொழுது போக்கி, இரட்டை வேடம் போடும் அதிமுக”,  “ஊழலின் ஊற்றுக்கண்ணாகத் திகழும் அதிமுக ஆட்சி”, “ ஊழலில் திளைக்கும் அதிமுக அமைச்சர்களின் மீதான வருமான வரித்துறை ரெய்டு – உரிய விசாரணை நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றும் மத்திய பாஜக அரசு”, “மத்திய பாஜக அரசின் தமிழக விரோத திட்டங்களுக்கு துணைபோகும் அ.தி.மு.க அரசு” ஆகிய தீர்மானங்களை, மக்கள் மனங்களில் ஆழப்பதிந்திடும் வண்ணம், துண்டுப் பிரசுரங்கள் தயார் செய்து, தமிழகம் முழுவதும் ஊர்கள்தோறும் விநியோகித்திட ஆவன செய்வதென்றும்; தீர்மானங்களை விளக்கி எளிய முறையில் திண்ணைகள் தோறும் பிரச்சாரங்கள் மேற்கொள்வதென்றும்; மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.