“எதிரிகளைக் கூட மன்னித்து விடலாம்; துரோகிகளை மன்னிக்க முடியுமா?” என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளது, கட்சிக்குள் களையெடுப்பு நடக்க இருப்பதற்கு முன்னோட்டமா என்கிற பரபரப்பு எழுந்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் நூலிழையில் அ.தி.மு.கவிடம் வெற்றிவாய்ப்பை தவறவிட்டது தி.மு.கழகம்.
அ.தி.மு.க 134 இடங்களில் வென்றது. தி.மு.க. கூட்டணி 98 இடங்களை கைப்பற்றியது. அதோடு வாக்கு சதவிகித வித்தியாசமும் இரு கட்சிகளிடையே குறைவாகவே இருந்தன. பல தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தி.முக. தோற்றது.
download (1)
தற்போது அ.தி.மு.க. சார்பாக ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்றுவிட்டாலும், வெற்றி வாய்ப்பை இழந்த ஆதங்கம் தி.மு.க.வில் தொடர்கிறது.
இந்த நிலையில் சிறிது நேரத்துக்கு முன்பு, “கட்சியின் உறுப்பினர்களுக்குத் துரோகம் செய்தவர்கள் பற்றி கழகத் தலைமை நன்றாகப் புரிந்து கொள்ள இந்தச் செயற்குழு பெரிதும் உதவியாய் அமைந்தது. எதிரிகளைக் கூட மன்னித்து விடலாம்; துரோகிகளை மன்னிக்க முடியுமா?” என்று தனது முகநூல் பக்கத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுதியுள்ளார்.
“கட்சிக்கு விரோதமாக செயல்பட்டவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையே கருணாநிதி சூசகமாக தெரிவித்திருக்கிறார்” என்று தி.மு.க. வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.