மறந்து போச்சா மருத்துவரே என்கிற தலைப்பில் மீண்டும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி சீண்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தொடர்பாக கடந்த 9 நாட்களாக “மறந்து போச்சா மருத்துவரே” என்கிற தலைப்பில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி விமர்சனங்களை வெளியிட்டு வருகிறது.

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு, மறைந்த வன்னிய சமுதாய தலைவரான கோவிந்தராஜூவுக்கு மணிமண்டபம் உள்ளிட்ட அறிவிப்புகளை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். அப்போது முதல் திமுகவையும், அதன் தலைவரான ஸ்டாலினையும், பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்து வருகிறார். இரு தலைவர்களும் அறிக்கைகள் வழியாக விமர்சனங்களை முன்வைத்த வந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரம் செய்த ராமதாஸ், வன்னியர்களின் ஒரு வாக்கு கூட திமுகவுக்கு விழக்கூடாது என்று பேசியிருந்தார். இதனால், ராமதாஸின் கடந்த கால வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி “மறந்து போச்சா மருத்துவரே” என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், இட ஒதுக்கீடு போராட்டத்தில் கலந்துக்கொண்டு துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த  குடும்பத்தினருக்கு தலா 10 மாடுகள் வாங்கித் தருவதாக கூறினீர்களே, அது என்னவாயிற்று என இன்றைய நாளேட்டில் மருத்துவர் ராமதாஸுக்கு திமுக தரப்பிலிருந்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அத்தோடு, இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் நினைவாக மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்திருந்தீர்களே, அந்த அறிவிப்பு என்னவானது என்றும் வினவப்பட்டுள்ளது.

தொடர்ந்து திமுக – பாமக இடையே கருத்து மோதல்கள் அதிகரித்து வருவதால், இடைத்தேர்தலில் அதன் தாக்கம் பிரதிபலிக்கும் என்று திமுகவும், அதிமுகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.