ஆர்எஸ் பாரதியின் கைது நடவடிக்கைக்கு கண்டனம்: திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ. ராசா அறிக்கை

சென்னை: ஆர்எஸ் பாரதியின் கைது நடவடிக்கையை திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும், எம்பியுமான ஆ. ராசா கண்டித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஊழலும் மதவாதமும் கைகோர்த்து நடத்தும், மலிவும் இழிவும் கலந்த தமிழக அரசியலில் சமீபகாலமாக ஜனநாயக மாண்புகளை புதைத்து நாகரீகமற்ற நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

குறிப்பாக பிரதமர் மோடி அரசின் ஏவலாளாக மாறிவிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் ஊழல் பட்டியல் நீண்டு கொண்டே போவதையும், கொரோனா தொற்றில் அரசு ஆற்ற வேண்டிய கடமைகளை எதிர்க்கட்சியான திமுக ஆற்றுவதை மக்கள் போற்றுவதையும், மறைக்கவும் திசை திருப்பவும்,  நாடாளுமன்ற உறுப்பினர் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதியை இன்று அதிகாலை 5 மணிக்கு வன்கொடுமைச் சட்டத்தில் தமிழக அரசு கைது செய்துள்ளது.

அரங்கக் கூட்டம் ஒன்றில் பேசியதற்காக ஆர் எஸ் பாரதி மீதும், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கருத்து கூறியதற்காக தயாநிதி மாறன் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம் தலித்துகளுக்கு எதிரானது என்று நிறுவிட மத்திய மாநில அரசுகள் முனைந்துள்ளன.

இருவரின் வார்த்தைப் பிரயோகங்களும் உள்நோக்கமற்றவை என்றும், அவை தவறான பொருள் கொள்ளப்பட வேண்டிய வேண்டியவை அல்ல என்றும் உறுதிபட மறுப்பு தெரிவித்ததோடு, தவறு ஏற்பட்டுவிடக் கூடாது எனும் உயர்ந்த மாண்புடன் பொறுப்புணர்ச்சியுடன் தங்கள் வருத்தத்தை பதிவு செய்த பின்பும், அரசியலுக்கு தங்களை வரித்து இணைத்துக் கொண்டவர்கள் அரசு இயந்திரத்தின் மூலம் குற்றவியல் வழக்கென்று குறுக்குசால் ஓட்டி திமுகவை வீழ்த்த முடியாதா என்று கனவு காண்கிறார்கள்.

தாழ்த்தப்பட்டோரின் சமூக விடுதலையும் அவர்களின் அரசியல் பொருளியல் முன்னேற்றத்திலும் அக்கறை கொண்ட கட்சியாக மட்டுமல்ல சமூக இயக்கமாகவும் இயங்கிக் கொண்டிருப்பது திமுகழகம். தமிழ் மொழி – இன அடையாள மீட்பு –  சாதி தீண்டாமை ஒழிப்பு,  பெண்ணுரிமை உள்ளிட்ட சமூகநீதி, பகுத்தறிவு ஆகியவற்றை அடித்தளமாக கொண்ட நூற்றாண்டு கால திராவிட இயக்க சிந்தனையில் மூழ்கி பயணிக்கும் திமுகழகத்தை வீழ்த்திட தலித் எதிர்ப்பு என்ற ஆயுதத்தை ஆளுங்கட்சி முனைவதை வரலாறு தெரிந்த எவரும் பரிகாசிக்கவே செய்வார்கள்.

ஒன்றின் கீழ் மற்றொன்று என மதிப்பீடு அடிப்படையில் இறுக்கமான அடுக்குகளாக பல்லாயிரம் ஆண்டுகளாக கட்டப்பெற்ற இந்திய சாதி அமைப்பில் தாழ்த்தப்பட்டவர்கள் சேரிகளில் ஒடுக்கப்பட்டுமல்ல, ஒதுக்கப்பட்டும் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்த தலைவர் கலைஞர் அவர்கள் தான் தந்தை பெரியார் பெயரில் 100 சமத்துவபுரங்களை அமைத்தவர் என்ற சரித்திரத்தில் இருந்து எவரும் பிரித்திட முடியாது. கலைஞர் ஆட்சியில் தமிழகம் கண்ட சமத்துவபுரத்தை வேறு எந்த மாநிலமும் கண்டிட இதுவரை மன வலிமை பெறவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆகவே சாதி படிநிலை உண்டு என்பதை எவரும் அறிவர். அதிலே கடைசி படிநிலையில் அருந்ததியர் வைக்கப்பட்டு துப்புரவு தொழிலாளர்களாகவும், கூலிகளாகவும் அவர்கள் நசுக்கப்பட்டு அரசு தரும் இட ஒதுக்கீட்டை கூட எட்டி தொட முடியாத தூரத்தில் சமூகநீதிக்கு வெளியே அல்லலறுவதைக் கண்ட திமுகவின் தலைவர் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் தான் பல எதிர்ப்புகளை புறம்தள்ளி 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி ஆயிரக்கணக்கான அருந்ததிய இளைஞர்களை மருத்துவர்களாகவும், அரசு  பணியாளர்களாகவும் அமர்த்திட வழிவகை செய்தவர்.

தாழ்த்தப்பட்டோர் விடுதலை நலன் எனும் பொது தத்துவார்த்த தளத்தில் திமு கழகம் கொண்டிருந்த அளப்பரிய அணுகுமுறை என்பதையும் தாண்டி கலைஞர் தொடங்கி இன்றைய தலைவர் வணக்கத்துக்குரிய மு க ஸ்டாலின் அவர்கள் மற்றும் முன்னணி தலைவர்களை  கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக நான் தனிப்பட்ட முறையில் அருகிலிருந்து அறிவேன் என்ற முறையில் என்னையே நான் உதாரணப்படுத்த விரும்புகிறேன்.

எங்கோ ஒரு குக்கிராமத்தில் ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் எட்டாவது பிள்ளையாகப் பிறந்து, எந்த அரசியல் பின்புலமும் இல்லாத என்னை மத்திய அரசின் ஊரக வளர்ச்சி, மக்கள் நல்வாழ்வு, வனம் சுற்றுச்சூழல், தொலை தொடர்பு துறை உள்ளிட்ட துறைகளுக்கு அமைச்சராக அமர்த்தி சமூக மாற்றத்தை கண்டு மகிழ்ந்த இயக்கம் திமுக.

திமுகவில் பதவியும், புகழும் பெற்ற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த சிலரே தன்நலன் கொண்டும், தனிநலன் வேண்டியும் அவ்வப்போது துரோகமிழைப்பது, தூற்றுவது என்பவை எல்லாம் பெருக்கெடுத்தோடும் ஜீவநதியில் வீசப்பட்ட சிறு கல்லாகவே திமுக உயர்ந்து புறந்தள்ளி இருக்கிறது, பொருட்படுத்தவே இல்லை.

தேவைப்படும்போதெல்லாம் வேறு வேறு வடிவம் எடுக்கும் ஒரு செல் உயிரி அமீபா மாதிரி சில அரசியல் ஒருசெல் உயிரிகள்  திமுகவுக்கு எதிராக அவ்வப்போது புதுப்புது வடிவங்களில் கட்டாரிகளை தயாரிப்பார்கள். அவைகளை கரிக்கட்டைகள் என்று மெய்பிக்க நீண்ட நேரம் திமுகவுக்கு தேவைப்படுவதில்லை.

பழங்குடியினர் சிறுவனை அமைச்சர் என்ற தலைக்கனத்தோடு தன் காலணிகளை கழற்றச் சொல்லி அதிரடி உத்தரவிட்டு அவமானப்படுத்திய தன் சகாவை கண்டிக்கவும் தண்டிக்கவும் யோக்கியதை இல்லாத முதுகெலும்பற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக மீது சாதிய களங்கம் கற்பிப்பது விசித்திரமான விந்தை. முரசொலி பஞ்சமி நிலத்தில் உள்ளது என்று கூச்சல் போட்டவர்கள், கூடி கூப்பாடு போட்டவர்கள் வழக்கு  மன்றத்திலே வாய்திறக்க முடியாமல் மவுனிகளானார்கள்.

ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் என்று ஒரு கிராம வழக்கு உண்டு. அப்படி இன்னொரு பொய்யை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது எடப்பாடி அரசு. இந்த பொய்க்கும் பாதுகையடி பதில் காத்திருக்கிறது.

சமூக நீதியும், சாதியற்ற சமுதாயமும் இயக்கத்தில் லட்சியங்களில் முதன்மையானவை என்பதில் சமரசம் செய்துகொள்ளாத கலைஞரின் தத்துவ வாரிசாகத் தன்னை வளர்த்துக்கொண்ட தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் பயணிக்கும் இவ்வியக்கத்தை அரசாங்க கவசம் கையில் இருக்கிறது என்ற மமதையில் அசைத்துப் பார்க்கும் எந்த ஈனர்களும் வெற்றி பெற முடியாது என்பது மட்டுமல்ல, இந்தக் கவசமும் கூட அவர்கள் கையில் நீண்ட நாள் நிலைக்காது. அவர்களை காப்பாற்றாது.

தனது ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு சிறு துரும்பைக்கூட கிள்ளிப் போடாத எடப்பாடி அரசு, வன்கொடுமை சட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தவறாக பயன்படுத்தியிருப்பது அச்சட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து கேலி பொருளாக்கி, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்கும், பாதுகாப்பிற்கும் பேராபத்தையே விளைவிக்கும்.

அப்படி ஒரு பேராபத்தை விளைவிக்கும் எடப்பாடி அரசின் இத்தகைய இழிசெயலை சமூக நீதியில் அக்கறை உள்ள எவரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். எனவே அருவருக்கத்தக்க குறுகிய அரசியல் லாபத்திற்காக சட்டத்தை வளைத்து சமூக அமைதியை கெடுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இனி மேலாவது இப்படிப்பட்ட கோணல் புத்தியை கைவிட்டுவிட்டு, மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையில் கூறி உள்ளார்.