சென்னை,

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். முதன்மை செயலாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாவட்ட செயலாளர்கள் பொன் முடி, அனிதா ராதாகிருஷ்ணன், சுரேஷ், ராஜன், மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, ஜெ.அன் பழகன், கீதா ஜீவன் உள்பட அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

டெங்குக் காய்ச்சலுக்கு குழந்தைகளும், மாணவ மாணவியரும், இளைஞரும், முதியோரும் இறப்பதை மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் ஆழ்ந்த வருத்தத்துடனும், பெருங்கவலையுடனும் பதிவு செய்கிறது.

டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தமிழகம் முழுவதும் கழகத்தினர் அனைவரையும் அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் பணிகளில் ஈடுபடச் செய்து வரும் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், கழகத் தோழர்களுக்கும் மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

தமிழகத்தில் மருத்துவ நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்து, மாநில அரசு கோரிய நிதியுதவியை அளித்து, டெங்குவில் இருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றும் வகையில், இதை ஒரு “சுகாதாரப் பேரிடர்” என்று கருதி மத்திய-மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

அ.தி.மு.க. அமைச்சர்கள் எப்படியாவது-எதைச் செய்தாவது தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில், திராவிட இயக்கம் நெடுங்காலமாகப் போராடிப் பெற்ற மாநில உரிமைகளை ஒவ்வொன்றாக மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசிடம், தாரை வார்த்து வருவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து, “குதிரைபேர அரசு” நடத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் எவ்வளவுதான் ஊழலில் பரஸ்பரப் பங்கு பற்றிப் பேசி பரிமாறினாலும், சட்டத்தின் முன்பு நிறுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

அரசின் ஆயுட்காலம் எந்த நேரத்திலும் முடிவிற்கு வந்து, தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டத்தில் இருப்பதால், வாக்காளர் பட்டியல் தொடர்பான பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத காரணத்தால், உள்ளாட்சி அமைப்புகள் முறையாக இயங்காத நிலை ஏற்பட்டு அதன் விளைவாக, ‘டெங்கு’ உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுக்கும் பணிகள் நடைபெறாமல் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஒரு வருடம் ஆன நிலையிலும், உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தனி அதிகாரிகள் நியமனம், தொகுதி மறு சீரமைப்பு ஆணையம் என்று உள்நோக்கத்தோடு அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்து உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதை தள்ளிப்போட்டு வருகிறது.

அரசின் முயற்சிகள் அனைத்தையும் நிராகரித்துள்ள உயர்நீதிமன்றம் ‘‘உள்ளாட்சித் தேர்தலை வருகின்ற நவம்பர் 17-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்’’ என்றும் செப்டம்பர் 18-ந்தேதிக்குள் தேர்தல் அறிவிக்கையை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

எனவே காலம் தாழ்த்தாமல், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தி ஜனநாயகத்தைப் பாதுகாத்திட முன்வர வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.