தி.மு.க.வினரே…  உதயநிதி ஸ்டாலினிடம் இதைக் கேட்பீர்களா?

திமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம், கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. தஞ்சாவூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில், கருணாநிதி மற்றும் ஸ்டாலின் புகைப்படங்களுடன், உதயநிதியின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.

அந்தப் புகைப்படத்தைப் பதிவிட்டு, ‘மிஸ்டர் உதயநிதி, ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவருப்பாக இருக்கு தெரியுமா? உங்களுக்குத் தோணலையா? முன்னணி தலைவர்கள் மேடையில, உங்கள் போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன?’ என்று ஷாமுராய் என்பவர் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்துள்ள உதயநிதி, ‘தவறு… மீண்டும் நடக்காது’ என உறுதியளித்துள்ளார்.

இந்த பணிவான பதிவுக்காக உதயநிதியை சமூகவலைதளங்களில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

அதே நேரம், “உதயநிதியிடம் கேட்க வேண்டிய வேறு முக்கிய கேள்விகள் இருக்கின்றனவே.. அதற்கும் அவர் இதுபோல இனி நடக்காது என்பாரா” என்ற கேள்வியுடன் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.

அவர்களது பதிவில், “தி.மு.க. கூட்ட மேடையில் இருந்தது குறித்து கேள்விக்கு இந்தத் தவறு மீண்டும் நடக்காது என்று உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அவரது தன்னடக்கம் பாராட்டத்தக்கதே.

அதே நேரம், அவரிடம் கேட்கவேண்டிய – இதைவிட முக்கியமான கேள்விகள் உள்ளன.

சமீபத்தில் கூடிய தி.மு.க. பொதுக்குழுவில்கூட முக்கிய பிரமுகராக கலந்துகொண்டார். வந்திருந்தவர்களுக்கு பதில் வணக்கம் சொல்லியே அவரது கைகள் ஓய்ந்து போயின. இந்த அளவுக்கு முக்கியத்துவம் தரும் அளவுக்கு இவர் கட்சிக்கு என்ன செய்தார்?

கட்சியினரின் வியர்வைப்பணத்தில் உருவாகி நடந்துவரும் அதிகாரப்பூர்வமான நாளிதழான “முரசொலி”க்கும் உதயநிதிக்கும் என்ன தொடர்பு? அந்நாளிதழின் பொறுப்பாளராக இவர் நியமிக்கப்பட்டது எதன் அடிப்படையில்? இந்நாளிதழ் பொறுப்புக்கு சம்பளமும் பெறுகிறாராமே.. இது நியாயமா?

 

கட்சி அறக்கட்டளையில் இவருக்கும் இவரது மச்சினர் சபரீசனுக்கும் பொறுப்பு. இவர்கள் கட்சிக்கு செய்தது  என்ன?

# இந்தக் கேள்விகளை உதயநிதி ஸ்டாலினை நோக்கி தொண்டர்கள் கேட்க வேண்டும். இவற்றுக்கும், “தவறுதான்.. இனி இப்படி நடக்காது” என்று உதயநிதி பதில் அளித்தால்..அதன்படி நடந்தால்.. அப்போது அவரை நிஜமாகவே வாழ்த்தலாம்!” – என்று சிலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

கார்ட்டூன் கேலரி