கணினி மூலம் நீட் தேர்வு நடத்த ஸ்டாலின் எதிர்ப்பு

சென்னை:

நீட், ஜேஇஇ தேர்வுகள் ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். இந்த தேர்வுகள் கணினி முறையில் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இத்தேர்வுகளை கணினி மயமாக்குவதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘தமிழக மாணவர்களின் மருத்துவ கனவையும், சமூக நீதியையும் சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் கணினியே இல்லாத குடும்பங்களில் வாழ்பவர்கள். இயலாமை நிறைந்த சூழலில் கணினி வழியே எப்படி தேர்வு எழுத முடியும்?.

மருத்துவ படிப்பு கிராமப்புற மாணவர்களுக்கு எட்டா கனியாக இருப்பதற்கே இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. நீட் தேர்வு வழியே மருத்துவ கனவை சீர்குலைக்கும் மத்திய அரசுக்கு கிராமப்புற மாணவர்கள் பாடம் புகட்டுவார்கள்’’ என்றார்.