சென்னையில் குடிநீர் பிரச்சனை எதிரொலி: வார்டு வாரியாக போராடும் திமுக

சென்னையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி வார்டு வாரியாக திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் கடுமையாக உள்ளது. நிலத்தடி நீர் மட்டம் வறண்டு விட்டதால் லாரி தண்ணீரை நம்பி பெரும்பாலான மக்கள் காத்து கிடக்கிறார்கள். பல்வேறு இடங்களில் பொதுகழிப்பிடங்களும் தண்ணீர் இன்றி மூடப்பட்டு கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் குடிப்பதற்கும், வீட்டு உபயோகத்திற்கும் தண்ணீருக்கு தவிக்கிறார்கள். தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அரசு போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக குற்றம்சாட்டி வருகிறது. இதையடுத்து வரும் 22ம் தேதி மாவட்ட தலைநகரில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தவும் திமுக திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று முதல் வார்டு வாரியாக குடிநீர் பிரச்சனையை தீர்க்க கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். அந்தந்தப் பகுதி வட்ட திமுக நிர்வாகிகள், பகுதி மக்களை திரட்டி காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தியாகராய நகரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன், “அதிமுக அரசு தண்ணீர் பிரச்சினையில் போதிய அக்கறை காட்டவில்லை. மக்கள் கடும் பாதிப்பு அடைந்த போதிலும் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறி வருகிறார். மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது அரசின் கடமையாகும். ஆனால் பிரச்சினையை மூடி மறைக்கும் நோக்கத்தில் அரசின் செயல்பாடு உள்ளது.

இதனால் எங்களால் இயற்ற அளவு பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி வருகிறோம். அரசும் முழு அளவில் மக்களுக்கு தண்ணீர் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.