கறுப்பர் கூட்டத்தின் கருத்தை திமுக வன்மையாக கண்டிக்கிறது…. ஆர்.எஸ்.பாரதி

--

சென்னை:

முருகனின் கந்த சஷ்டி கவசம் குறித்து, கறுப்பர் கூட்டம் தெரிவித்த  கருத்தை திமுக வன்மையாக கண்டிக்கிறது என்று திமுக சட்டத்துறை செயலாளர்  ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

கறுப்பர் கூட்டம் என்ற யுடியூப் சேனல்,  தமிழ்க்கடவுள் முருகனின் கந்தசஷ்டி கவசத்தை இழிவு படுத்தும்  வகையில்  கருத்து தெரிவித்திருந்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்துக்கள் கொதித்தெழுந்த நிலையில், கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையில், கறுப்பர் கூட்டம்  யூடியூப் சேனலுக்காக சட்ட ரீதியில் உதவுவதாக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக குறிப்பிட்டு போலியான  செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. ஆலந்தூர் பாரதி, கறுப்பர் கூட்டத்தின் கருத்தை திமுக வன்மையாக கண்டிக்கிறது என்றார்.

கறுப்பர் கூட்டம் அமைப்புக்கு திமுக ஆதரவு என பொய் பிரசாரம்  செய்யப்பட்டு வருவதாகவும்,  திமுக தலைவர் ஸ்டாலின் மீது திட்டமிட்டு அவதூறு பரப்ப‌ப்படுகிறது.

கலைஞர் ஆட்சியில் இந்து கோயில்கள் எல்லாம் பாதுகாக்கப்பட்டன.  திமுக 5 முறை ஆட்சி செய்தபோது ஏராளமான கோயில்கள் சீரமைக்கப்பட்டன. திருவாரூர் தேரை ஓட வைத்தவர் திமுக தலைவர் கலைஞர்/

கபாலீஸ்வரர் கோயில் குளம் சீரமைக்கப்பட்டதும் கலைஞர் ஆட்சியில் தான் எனவும் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.