கருணாநிதிக்கான நினைவேந்தல் கூட்டத்துக்கு அ.தி.மு.க.வையும் அழைத்திருக்கலாம்!: தி.மு.க.வின் அதி தீவிர ஆதரவாளர் சுப.வீ கருத்து

திமுக தலைவர் கருணாநிதிக்கான நினைவேந்தல் கூட்டத்திற்கு  அ.தி.மு.க.வையும் அழைத்திருக்கலாம் என்று தி.மு.க.வின் அதிதீவிர ஆதரளவாளரான சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தை  சென்னை நந்தனத்தில் வரும் 30-ம் தேதி  தி.மு.க. நடத்துகிறது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.   இவர்கள் பெயர்கள் பதியப்பட்ட அழைப்பிதழ்களும் பலருக்கும் அளிக்கப்பட்டன.

இதில், அமித் ஷா கலந்து கொள்ள உள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “தமிழகத்தில் பா.ஜ.க.வை தடுக்கும் கேடயமாக தி.மு.க. இருக்கும்” என்று பேசிவரும் தி.மு.க. ஆதரவாளர்களுக்கு அமித்ஷாவின் வருகை அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சமூகவலைதளங்களிலும் கடும் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், “கருணாநிதிக்கான நினைவேந்தல் கூட்டத்திற்கு போவதில்லை என்று அமித்ஷா எடுத்த முடிவை வரேற்கிறேன்” என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து அமித்ஷா வரவில்லையோ என்ற யூகம் கிளம்பியது. ஆனால், “சுப்ரமணியன் சுவாமியின் கருத்து கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்தல்ல” என்று தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். ஆகவே அமித்ஷா வருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

பிறகு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, “அமித்ஷா வருவது குறித்து இதுவரை எங்களுக்கு தகவல் ஏதும் வரவில்லை” என்று தெரிவித்தார். ஆகவே அமித்ஷா வருகை குறித்து மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே அமித்ஷாவுக்கு தி.மு.க. அழைப்பு விடுத்தது குறித்த அதிருப்தியும் தி.மு.க. ஆதரவாளர்கள் சிலரிடையே அதிகரித்து வருகிறது.

தி.மு.க.வின் அதிதீவிர ஆதரவாளரும் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவருமான சுப.வீரபாண்டியன், “திமுக தலைவர் கருணாநிதிக்கான நினைவேந்தல் கூட்டத்திற்கு பா.ஜ.க.வை அழைக்கும்போது அ.தி.மு.க.வையும் அழைத்திருக்கலாம்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

திராவிட இயக்க தமிழர் பேரவை அமைப்பை சுப.வீரபாண்டியன் ஆதரித்தபோது, “இது தி.மு.க. ஆதரவு அமைப்போ என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறதே!” என்று கேட்கப்பட்டபோது, “சந்தேகமே வேண்டாம்! இது, தி.மு.க. ஆதரவு அமைப்புதான்!” என்று பளிச் என பதில் அளித்தார்.

கருணாநிதி இருந்தவரை, தி.மு.க.வின் முடிவுகள் குறித்து எதிர்மறை விமர்சனம் செய்யாதவர். இந்த நிலையில் இவர் அதிரடியாக டி கருத்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையே கருணாநிதிக்கான நினைவேந்தல் கூட்டத்திற்கு அமித்ஷா வராதபட்சத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனோ, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனோ பாஜக சார்பாக கலந்துகொள்வார்கள் என்று ஒரு தகவல் உலவ ஆரம்பித்துள்ளது.