சென்னை:

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப்பங்கீடு என பிசியாக செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்.  திமுக இன்று ஒரே நாளில் 4 கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. கூட்டணி பேச்சு வார்த்தைகள் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு மற்றும், மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்தும் வகையில் தமிழகத்தில்  திமுக காங்கிரஸ் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று மாலை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மற்ற கூட்டணி கட்சிகளிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே அதிமுக பாஜக, பாமக கூட்டணி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், நேற்று திமுக காங்கிரஸ் கூட்டணி அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து திமுக தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் கூட்டணி கட்சிகளுடன் இன்று பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.

இன்று பகலில்,  கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு  குறித்து தி.மு.க – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

அதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் பேச்சு வார்த்தை நடைபெறு கிறது.

மதிய இடைவேளைக்கு பிறகு,  இன்று மாலை  6மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறது. இதில்  தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதையடுத்து, மாலை 7மணிக்கு ம.தி.மு.கவுடன்  திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.