சென்னை:

இன்று காலை கூடிய சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் திமுக.வினர் அமளியில் ஈடுபட்டதால் மதியம் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 1 மணிக்கு அவை கூடியதும் மீண்டும் அமளி தொடர்ந்ததால் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த இடைப்பட்ட நேரத்தில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ.க்கள் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதன் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 122 வாக்குகள் பெற்று முதல்வர் வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

இதன் பின்னர் அவர் பேசுகையில்,‘‘நான் விதிப்படி தான் பேரவையை நடத்தினேன். நான் மிகவும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவன். இதனால் திமுகவினர் என்னை இலக்காக குறி வைத்து, திட்டமிட்டு இன்று செயல்பட்டனர். அவர்கள் என்னை கட்டுப்படுத்திவிடலாம் என்று திட்டமிட்டிருந்தனர்.

அதனால் தான் அவர்கள் பேரவைக்கு வெளியேயும் என்னை தாக்கி பேசியுள்ளனர். பேரவை விதிப்படி தான் சட்டமன்றத்தை நடத்தியுள்ளேன். திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்திருந்தாலும் தீர்மானம் வெற்றி பெற்றிருக்கும்’’ என்றார்.