சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. இளைஞர் அணியில் 50 பேருக்கு ‘டிக்கெட்’

தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்னும் மூன்று மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் பிரச்சாரத்தை ஏற்கனவே ஆரம்பித்து விட்டன.

யார்? யாருடன் கூட்டணி என்பது உறுதியாக தெரியாத நிலையில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தனது தரப்பு வேட்பாளர்களை முடிவு செய்து விட்டதாக தெரிகிறது.

இளைஞர் அணி செயலாளராக அவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பொறுப்பேற்றார். தனது அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதன் முறையாக பேசும் போது “இளைஞர் அணி நிர்வாகிகளில் குறைந்த பட்சம் 30 பேருக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும்” என உறுதி அளித்தார்.

இந்த நிலையில், இளைஞர் அணியை சேர்ந்த 50 பேரை களத்தில் இறக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு கட்சி மேலிடம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, மாநில இளைஞர் அணி செயலாளர்கள் கார்த்திக் மோகன், நெல்லை துரை, தூத்துக்குடி ஜோயல் ஆகியோருக்கு சீட் கிடைப்பது உறுதி என நம்பப்படுகிறது.

– பா. பாரதி