தமிழகத்திற்கு 6 ஆண்டுகளில் பாஜக, அதிமுக கூட்டணி செய்தது என்ன? டி.ஆர்.பாலு கேள்வி

சென்னை: தமிழகத்திற்கு 6 ஆண்டுகளில் பாஜக, அதிமுக கூட்டணி செய்தது என்ன என்று டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக அரசு சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், ஊழல் குறித்து பேசுவதற்கு காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் 10 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த திமுக, தமிழகத்திற்கு என்ன செய்தது? என்றும் கூறினார். இந் நிலையில் அமித்ஷாவின் கேள்விக்கு பதில் தரும் வகையில், திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் திமுக இருந்த காலத்தில் தான்.

சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தது திமுக தான்.  காவிரி நடுவர் மன்றம், விவசாயிகளின் 72 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது ஆகியவை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக அங்கம் வகித்த காலத்தில் தான்.

மத்திய பாஜக அரசு-அதிமுகவுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டிற்குச் செய்தது என்ன? ஹைட்ரோ கார்பன் திட்டம், இந்தித் திணிப்பு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட துரோகங்களையே செய்துள்ளது.

ஜிஎஸ்டி மூலம் இதுவரை தமிழகத்தில் இருந்து கிடைத்த நிதி எவ்வளவு? என்றும், அதில் தமிழ்நாட்டிற்கு செலவிட்டது எத்தனை கோடி? என்று அந்த அறிக்கையில் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.