Random image

15ந்தேதி திமுக முப்பெரும் விழா: தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு

விழுப்புரம்:

விழுப்புரத்தில் வருகிற 15-ந்தேதி திமுக முப்பெரும் விழா அண்ணா திடலில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு விருதுகள் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

இந்த விழாவில் மாநிலம் முழுவதும் இருந்து திமுக தொண்டர்கள் வந்து கலந்துகொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில்,   திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், கட்சியின் பொருளாளர் துரைமுருகன் உட்பட அனைத்து முக்கிய தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

விழாவில் வழக்கப்படி வழங்கப்பட இருக்கும் விருதுகளையும், அவற்றைப் பெறுவோரையும் பட்டியலிட்டிருக்கும் ஸ்டாலின், இந்த ஆண்டு முதல் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் பெயரில் மேலும் ஒரு விருது அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்கொண்டுள்ள சவாலைத் சந்திப்பதற்கான சூளுரையை மேற்கொள்ள விழுப்புரத்தில் கூடுமாறு திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் அக்கடிதத்தில் அழைப்பு விடுத்துள்ளார்

திமுக கட்சி சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15ந்தேதி முப்பெரும் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு முப்பெரும் விழா விழுப்புரத்தில் நடைபெற உள்ளது. இதற்காக  30 அடி அகலத்துக்கும், 70 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

விழாவுக்கு திமுக  பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ.வு மான பொன்முடி வரவேற்று பேசுகிறார். திமுக பொருளாளர் துரைமுருகன், துணை பொது செயலாளர்கள் ஐ.பெரிய சாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள்.

இந்த முப்பெரும் விழாவில் திமுக தலைவராக பொறுப்பேற்று முதன்முறையாக மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்கி பேசுகிறார்.

இந்த விழாவில், பெரியார் விருதை மும்பை தேவதாசனும், அண்ணாவிருதை விழுப்புரம் மாவட்டம் தியாக துருகம் பொன்ராமகிருஷ்ணனும், கலைஞர் விருதை குத்தாலம் கல்யாணமும், பாவேந்தர் விருதை இந்திரகுமாரிக்கும், பேராசிரியர் விருது கவிக்கொண்டன் மா.செங்குட்டுவனுக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், முரசொலி அறக்கட்டளை சார்பில் மாநில அளவில் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி, உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நிதியளிப்பு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. மேலும் விபத்தில்லாமல் ஆட்டோக்கள் ஓட்டிய டிரைவர்களுக்கும் நற்சான்றிதழ், பதக்கம் வழங்கப்படுகிறது.

இந்த முப்பெரும் விழாவில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.