சந்திரபாரதி:

ஆர்.கே. நகர் தேர்தல் ஆட்சி அமைப்பதற்கோ, ஆட்சி அங்கீகாரத்தைக் கோரவோ நடக்கும் இடைத் தேர்தல் அல்ல. மாறியுள்ள அரசியல் சூழ்நிலையில் திமுக தனது செயல் தலைவர் தலைமையில் சந்திக்கும் தேர்தல், பிளவு பட்டிருக்கும் அதிமுகவின் தலைமைகள் பலப் பரிட்சையில் மோதிக் கொள்ளும் களம் மட்டுமே.

மக்கள் பிரச்சனைகளை முன் நிறுத்தி நடைபெறும் தேர்தலல்ல.

எனவே, கடந்த கால எண்ணிக்கைகளை வைத்தே இந்த இடைத் தேர்தலை அணுகிப் பார்க்கலாம். ஆர்.கே. நகர் வாக்காளர் எண்ணிக்கை, 2,54,000 (சற்று கூட, குறைய இருக்கலாம்). இடைத் தேர்தலில் சென்ற தேர்தலில் பதிவான அளவே வாக்குகள் பதிவானால், பதிவாகக் கூடிய வாக்குகள் 1,75,000. கடந்த முறை பதிவான வாக்குகளில் திமுக  33.14 சதவிகிதம் பெற்றிருந்தது. சென்ற தேர்தலுக்குப் பிறகு மக்கள் மத்தியில் திமுகவிற்கு ஆதரவு அதிகரிக்கவில்லை என்று எடுத்துக் கொண்டால் திமுக 58,000 வாக்குகள் வரைப் பெற வாய்ப்புண்டு. கடந்த கால தேர்தல்க ளில் கூட திமுக கணிசமான ஆதரவாளர்களை இத் தொகுதியில் வாக்காளராகக் கொண்டிருந்தது புள்ளியியல் தகவல்களில் இருந்து நன்கு தெரியவரும்.

மற்ற கட்சிகளுக்கு இத் தொகுதியில் பெரிய ஆதரவு இல்லை என்று எடுத்துக் கொண்டால் (கடந்த கால கணக்குகள் படி) அதிமுகவிற்கு கிடைக்கக் கூடிய அதிக பட்ச வாக்குகள் 1,10,000 க்குள் தான் இருக்க முடியும். இது ஒன்றிணைந்த, வலுமையான தலைமையைக் கொண்ட அதிமுகவிற்கு கிடைக்கக் கூடிய வாக்குகள்.

இன்றைய சூழலில் அதிமுக இரண்டாகப் பிளந்து இருக்கிறது. கூடவே, ஜெயாவின் இரத்த சம்பந்தமும் களமிறங்குகிறது. ஜெயா மறைவு குறித்த சந்தேகங்கள், மூன்று மாதங்களில் மூன்று முதல்வர்கள் என்ற நிலை, அருவருக்கத்தக்க அதிகாரப் போட்டி, சசிகலா தலைமையை முழு மனதோடு ஏற்காத தொண்டர்கள், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தார் மீது மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள அசூயை போன்றவையைக் கணக்கில் கொண்டால், அதிமுகவிற்கு கிடைக்கக் கூடிய 1,10,000 வாக்குகளில் கணிசமான குறைவு ஏற்படலாம்.

அது திமுகாவை நோக்கிச் செல்லாவிட்டாலும், அதிமுக அணிகளை நோக்கி வருவதில் குறைபாடுகள் இருக்கலாம். குறைந்த பட்சம், 15,000 இலிருந்து 20,000 ஆயிரம் அதிமுக ஆதரவு வாக்குகள் திசை மாறலாம், பதிவாகாமலே போகலாம். மீதமுள்ள, ஆதரவாகப் பதிவாகக் கூடிய சராசரி 90000 ஆயிரம் வாக்குகளில் சசிகலா தரப்பு அதிமுகவிற்கு 60 சதவிகிதம் (பண பலம், ஆட்சி பலம், இரட்டை இலை சின்னம் (கிடைத்தால்)) வாக்குகளும் 40 சதவிகித வாக்குகள் ஓபிஎஸ் அணிக்கும் செல்லலாம். இவர்களிடமிருந்து சில ஆயிரம் வாக்குகளை தீபாவும் பிரிக்கக் கூடும். இதனடிப்படையில், திமுக 60,000, அதிமுக (சசிகலா) 50,000. ஓபிஎஸ் 40,000 தீபா உட்பட மற்றவர்கள் 20000 வாக்குகள் பெற வாய்புள்ளதாகவே தோன்றுகிறது.

திமுக களப்பணியில் எச்சரிக்கையாகவும் உத்வேகத்துடன் இருந்து தனது ஆதரவு வாக்காளர்கள் வாக்களிக்கும் மையங்களுக்கு வருவதை உறுதி செய்யவேண்டியது கட்டாயம். திமுகவின் வெற்றி தேர்தல் நாளில் அவர்களது களப்பணியிலிருக்கிறது. சிதறிப் போயிருக்கும் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

(குறிப்பு: கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்களே. பத்திரிகை டாட் காம் இதழின் கருத்துக்கள் அல்ல.)