சென்னை: நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு பயம் காரணமாக தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அவரது அறிக்கை தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில்  நடிகர் சூர்யாவுக்கு திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

கல்வி உரிமை பறிபோகும்போது கலைஞர்கள்-படைப்பாளிகள் எழுப்பும் உரிமைக்குரலே மாணவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும். நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகள். பிற உச்ச நடிகர்களும் மாணவர் பக்கம் நிற்பார்கள் என நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.