சென்னை: சம்பந்திக்காக டெண்டர் விடுவது, உறவினருக்காக சாலையை தோண்டுவது என அரசு எந்திரத்தை தம்மை சார்ந்தோருக்கு சேவை செய்யும் அமைப்பாக மாற்றியுள்ள முதல்வரின் செயல் அருவருக்கத்தக்கது என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே முதல்வர் உறவினர் நிலத்துக்கு காவிரி நீர் எடுத்து செல்லும் நடவடிக்கையை கண்டித்து  போராடியவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது. இந் நிலையில், இது குறித்து டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள  திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அரசு எந்திரத்தை தம்மை சார்ந்தோருக்கு சேவை செய்யும் அமைப்பாக மாற்றியுள்ள முதல்வரின் செயல் அருவருக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது: எடப்பாடி அருகே சீரங்க கவுண்டம்பாளையத்தில் முதல்வரின் உறவினருடைய நிலத்துக்கு காவிரி நீரை எடுத்துச் செல்ல குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இதற்காக சாலையை தோண்டுவதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என அதிமுகவின் ஊராட்சி தலைவர் உட்பட அப்பகுதியினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

போராடியவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதில் ஒரு பெண்ணுக்கு காதில் காயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்திக்காக டெண்டர் விடுவது, உறவினருக்காக சாலையை தோண்டுவது என அரசு எந்திரத்தை தன்னை சார்ந்தோருக்கு சேவை செய்யும் அமைப்பாக மாற்றியுள்ள முதல்வரின் செயல் அருவருக்கத்தக்கது என்று கூறி உள்ளார்.