சென்னை: தேர்தல் பணிகளை திமுக தொடங்கக்கூடாது என்பதற்காக இ பாஸ் நடைமுறையை நீக்காமல் உள்ளனர் என்று திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஊரடங்கின் போது அயனாவரத்தை சேர்ந்த தாண்டவமுத்து என்ற ஆட்டோ ஓட்டுனர் எப்.சியை புதுப்பிக்க 5 மாதங்களாக அண்ணாநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முயற்சித்து வந்துள்ளார். இருப்பினும் பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க முடியாமல் போனது.

ஒருகட்டத்தில் மனம் வெறுத்து போன அவர் ஆட்டோவை தீ வைத்து கொளுத்தி, தற்கொலைக்கும் முயன்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந் நிலையில் தாண்டமுத்துக்கு புது ஆட்டோ வாங்கிக் கொள்வதற்காக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காசோலை வழங்கினார்.

தமிழகத்தில் நடைபெறும் இந்த ஆட்சி கமிஷன் மற்றும் கரப்ஷன் ஆட்சி. நான் இ பாஸ் எடுக்காமல் தூத்துக்குடி சென்றதாக சொல்கிறார்கள். நான் இ பாஸ் எடுக்காமல் சென்றிருந்தால் ஏன் என் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? தேர்தல் பணிகளை திமுக தொடங்கக்கூடாது என்பதற்காக இ பாஸ் நடைமுறையை நீக்காமல் உள்ளனர் என்றார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: வருமானமில்ல இன்சூரன்ஸ் கட்டமுடியல, கும்புடுறேன் ஆட்டோவுக்கு FC குடுங்கயா என்ற தாண்டமுத்துவின் வலி RTOக்கு புரியவே இல்லை. அலைக்கழிப்பு விரக்தியில் தன் ஆட்டோவுக்கு தானே தீவைத்தார். அவருக்கு தலைவர்@mkstalin  அவர்களின் ஆணைக்கிணங்க இளைஞரணி சார்பில் புதியஆட்டோ வாங்க  நிதியுதவி செய்தேன் என்று கூறி உள்ளார்.

மற்றொரு பதிவில் அவர் கூறி இருப்பதாவது: தாண்டமுத்துவுக்கு உதவியது மன நிம்மதியளிக்கிறது. ஆனால், தமிழகம்முழுவதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து லட்சக்கணக்கான தாண்டமுத்துக்கள் தவிக்கின்றனர். உதவவேண்டிய அரசோ அவர்களுக்கு தொல்லைகொடுத்து வருவது கண்டிக்கத்தக்கது. அண்ணன்கள் @Dayanidhi_Maran, @PKSekarbabu, @Ranganathan_MLA  நன்றி என்று தெரிவித்துள்ளார்.