“அம்பாள் எப்போதடா பேசினாள்… அறிவு கெட்டவனே…”

“ராமர் எந்தக் கோவிலில் பொறியியல் படித்தார்”

இந்தக் கேள்விகளை இந்தியாவில் உள்ள எந்தத் தலைவனாலாவது இன்று கேட்க முடியுமா?

புராண, இதிகாச பொய்களைக் கட்டவிழ்த்து விட்டபடி, சுவாமி… நாதா… என்று பிதற்றிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் உச்சி மண்டையில் அடித்து நீ எழுப்பிய அந்த முதல் கேள்வியில் பழமைவாதிகள் நிலைகுலைந்ததை பழங்கணக்கெற்று  ஒதுக்கிவிட முடியுமா?

அதற்குப் பிறகு சுமார் 50 ஆண்டுகள் கடந்த பின்னர், பகுத்தறிவுக் காரமும், தீரமும் சற்றும் குறையாமல், சேதுசமுத்திரத் திட்டத்திற்கு எதிராக ராமர்பாலம் என்ற கற்பனையை முன்வைத்த இந்துத்துவ மூர்க்கர்கள் இடிந்து போகும் வகையில் நீ எழுப்பியதுதானே அந்த இரண்டாவது கேள்வி.

தமிழ்ச் சமூகத்தை, பொய்ம்மைகளின் மயக்கத்தில் இருந்து விழித்தெழ வைத்து, அறிவு வெளிச்சம் பெருக்கெடுக்கும் பெருவெளிக்கு இழுத்து வர வேண்டும் என்பதற்காக இதே போன்ற எத்தனையோ கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருப்பாயே?

இப்போது மட்டும் என்னாயிற்று தலைவா உனக்கு?

ஒவ்வொரு நாளும் “உடன்பிறப்பே’ என விளித்து எங்களுக்கு ஓர் கடிதம் எழுத மாட்டாயா என அன்றாடம் முரசொலியை பார்த்து, பார்த்து ஏங்கும் எமது தவிப்பை உனக்கு யார் எடுத்துச் சொல்வார்?

எந்த மாநாடாக இருந்தாலும், எந்த அரங்கக் கூட்டமாக இருந்தாலும், எவருக்காக பங்கேற்றாலும், முத்தாய்ப்பாக, ‘உயிரினும் மேலான எனது உடன் பிறப்பே’ என்று உயிர் உருக எங்களை அழைக்காமல் தலைப்புக்குள் நீ போக மாட்டாயே…

கனித்தமிழ் கொஞ்சும் அந்தக் கரகர குரலெங்கே…?

தலைவா…

நெருப்பாற்றில் நீந்தி வந்தவன் நானென்று நீ சொன்ன போதெல்லாம், வார்த்தை ஜாலத்திற்காக கூறும் அலங்காரப் பேச்சென்று எதிரிகள் எள்ளி நகையாடியது உண்டு.

எங்களுக்கல்லவா தெரியும், நீ நீந்தி வந்த நெருப்பாறுகள் எத்தனை என்பதும், எத்தகையவை என்பதும்.

13 வயதுச் சிறுவனாக இருந்த போதே, அஞ்சாநெஞ்சன் என அழைக்கப்பட்ட பட்டுக்கோட்டை அழகிரியின் பேச்சாற்றலால் ஈர்க்கப்பட்டு, இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை நீ தொடங்கி போதே தொடங்கி விட்டதன்றோ உன் நெருப்பாற்றுப் பயணம்.

திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் 6ஆவது வகுப்பில் உனைச் சேர்த்துக் கொள்ள முடியாது என கஸ்தூரி அய்யங்கார் என்ற ஆசிரியர் நிராகரித்த போது, குளத்தில் குதித்து உயிரை விடுவேன் என போராட்ட வழியைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பள்ளியில் உனை ஏற்க வைத்தாயே… அப்போதே தொடங்கி விட்டாயே உனது போராட்ட வாழ்வை…

அதற்குப் பிறகு பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை நீ வெறும் கல்வி கற்கும் மாணவனாக மட்டுமா இருந்தாய்…

1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்த நேரம்… மாணவர்களை ஒருங்கிணைத்து இந்திக்கு எதிராக முழக்கமிட்டு பேரணி நடத்தினாய்… பின்னர் உன் வாழ்க்கை முழுக்க நடைபெற இருந்த பேரணிகளுக்குக் கட்டியமாக அது அமைந்தது.

 

சிறுவர் சீர்திருத்தச் சங்கம் அமைத்து சிறார்களுக்கு பேச்சுப் பயிற்சி அளித்தாய்… ஆம்.. பேசா மடந்தையாய் அடிமைப்பட்டுக் கிடந்த சமூகத்திற்கு தனது வலியைப் பேசும் திறன் வேண்டும் என நீ கண்ட கனவுத் தோட்டத்தில் பூத்த மலர்கள்தானே, பின்னாளில் கழகம் கண்ட பேச்சாற்றல் மறவர்கள் அனைவரும்…

தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற அமைப்பை நடத்தி, அப்போதைய கல்லூரி மாணவர்களாக இருந்த பேராசிரியர் க.அன்பழகனையும், கே.மதியழகனையும் அழைத்துப் பேச வைத்த போதே, தலைவர்களை உருவாக்கும் தகுதி உன்னிடம் புலப்பட்டது.

திராவிடநாடு இதழில் நீ எழுதிய ‘இளமைப்பலி’ கட்டுரை வெளி வந்த போதுதான், உனை இனம் கண்டு கொண்டார்  நமது அண்ணா…

1942ஆம் ஆண்டு ‘முரசொலி’யைத் தொடங்கி சேரன் என்ற புனைபெயரில் நீ எழுதி வந்த கனல் கக்கும் கட்டுரைகள்தான், உனது அரசியலுக்கும், எழுத்துக்கும் அடுத்த கட்ட அடித்தளங்களை அமைத்துத் தந்தன.

பின்னர் முரசொலி ஏட்டை பார்த்து நமது பகுத்தறிவுத் தந்தை பெரியார் உனைப் பாராட்டி நெகிழ்ந்தது, விடுதலையில் துணையாசிரியராக பணியாற்றியது, அங்கிருந்து ஜூபிடர் நிறுவனத்தில் பணியாற்ற பெரியாரைப் பிரிந்து சென்றது என உன்பயணம், காட்டாற்று புதுவெள்ளமாய் புகுந்து புறப்பட்டு எங்கெங்கோ சென்று கொண்டே இருந்தது. என்றாலும், நீ தொடங்கிய முரசொலி ஏட்டை மட்டும் உன் மூச்சைப் போல தாங்கிப்பிடித்து நடத்தி வந்தாய்.

நீதிக்கட்சி திராவிடர் கழகமாக பரிணமித்த போதும், திராவிடர் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் உதயமான போதும் அந்நிகழ்வுகளின் ஓர் அங்கமாக நீ இருந்திருக்கிறாய்.

ஆம். ஆரிய திராவிட போராட்டத்தின் நீட்சியாக, நீ மட்டும்தானே எங்களை வழிநடத்தி வருகிறாய். அதனால் தானே, யார் பெயரைக் கேட்கும் போதும் வராத எரிச்சலும் கோபமும், உன்பெயரைக் கேட்கும் போது மட்டும் ஆதிக்க சக்திகளுக்கு வருகிறது.

இருபதாம் நூற்றாண்டில் பற்ற வைக்கப்பட்ட பகுத்தறிவு நெருப்பை அதன் கங்கும், கனலும் அணைந்து விடாமல், இருபத்தோராவது நூற்றாண்டுக்கு எடுத்து வந்த தமிழ்ச் சமூகத்தின் அகல்விளக்கல்லவா நீ…!

‘உடன் பிறப்பே.. கழக உடன்பிறப்பே’, ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ போன்ற பாடல்களை இசைமுரசு ஹனீபா பெருங்குரலெடுத்துப் பாடும் போது, கரை வேட்டி காலை இடறிவிட, கருப்பு, சிவப்புத் துண்டு தோளில் இருந்து சரிய உணர்ச்சிப் பெருக்குடன் கழகக் கூட்டங்களுக்கு ஓடி வருவோமே… இனி அப்படி ஓடி வந்து உனைப் பார்க்க முடியுமா… உதயசூரியனாய் மேடையில் உதித்து, எமை நோக்கி முகம் மலர, அகம் மலரச் சிரித்து கையசைப்பாயே, அதைக் காணும் வாய்ப்புக் கிடைக்குமா?

உனை நோக்கி வந்தவற்றில் வாழ்த்துகளை விட வசை மொழிகள்தானே அதிகம். அதனால்தானே அதர்விலா ஊக்கமுடையவனாக, இமைப்பொழுதும் சோராமல் உன்னால் இயங்க முடிந்தது.

மற்ற அரசியல் தலைவர்களின் வரலாறைப் போல, உனது வரலாறு வெறும் சம்பவங்களால் நிரம்பியதல்லவே… ஏச்சுகளும், பேச்சுகளும், எதிர்ப்புகளும், துரோகங்களுமாக நீ எதிர்கொண்ட விழுப்புண்கள்தான் எத்தனை.. எத்தனை…

உன்னால் உருவாக்கப்பட்டவர்களில் யாரேனும் ஒருவர் உன்னை எதிர்க்காமல் இருந்ததுண்டா…

உன்னை வில்லனாகச் சித்தரித்தே வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை இப்போதும் நீண்டு கொண்டுதானே இருக்கிறது.

தலைவர் என்று யார் யாரோ இப்போதெல்லாம் அழைக்கப்படுகிறார்கள். எண்பதாண்டு கால போராட்ட வாழ்வின் அழுத்தமும், அர்த்தப் பொலிவும், அடர்த்தியும் அந்த வார்த்தைகளுக்குள் இல்லையே!

உனக்கு மட்டும் இத்தனை எதிர்ப்பு ஏன் தெரியுமா?

ஆரியத்திற்கு எதிரான ஒரே அரசியல் அச்சுறுத்தல் நீ

ஆதிக்க சக்திகளுக்கு எதிரான ஒரே எழுச்சிக் குறியீடு நீ

பெரியார், அண்ணாவுக்குப் பின்னர் மூடத்தனத்திற்கு எதிரான அறிவுசார் எச்சரிக்கையாக திகழ்வது நீ…

தமிழுக்கென, தமிழருக்கென திறட்சியான போர்க்குண அரசியல் அடையாளமாகத் திகழ்பவன் நீ…

நாவில் வேல்குத்துவதும், காவடி எடுப்பதும், பாதயாத்திரை செல்வதும், ஐயப்பன் கோவிலுக்கு விரதமிருப்பதுமான உளவியலில் திளைக்கும் பெரும் சமூகத்தில், அதற்கு எதிரான கொள்கைகளுடன், அதே நேரத்தில் வெகுமக்கள் இயக்கமாகவும் இயங்கி வரும் ஒரு கட்சியின் தலைவனாகவும் இருப்பவன் நீ…

வெகுமக்கள் உளவியலோடு எந்த முரணும் இல்லாமல் ஒத்துப் போகும் தலைவர்களுக்கும், கட்சிக்கும் எதிர்ப்பில்லாமல் இருப்பதும், மாறாக போற்றிக் கொண்டாடப்படுவதும் இத்தகைய சமூகத்தில் இயல்பானதுதானே…

அப்படி இருக்கும் போது, சமூகத்தை முன்னோக்கி அழைத்துச் செல்வதற்கான முரண்பட்ட கொள்கை அழுத்தம் கொண்ட உன்போன்ற தலைவனை எதிர்ப்பதும் இயல்புதானே…

அந்த வகையில் வாழ்நாள் முழுவதும் உனக்கு இருந்து வரும் எதிர்ப்புதான் எங்களுக்கு பெருமிதம் தருகிறது… அதுவே உனக்கும், உடன்பிறப்புகளாகிய எங்களுக்கும் நமது இயக்கத்திற்கான அடையாளமாகவும் நிலைத்துவிட்டது…

அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதலமைச்சர் பதவியில் அமர்ந்து கொண்டு, இங்கங்கெனாதபடி இந்துத்துவ உளவியல் ஊடுருவியிருக்கும் ஒரு சமூகத் திரளுக்குள் ஒருவனாய் வாழ்ந்து கொண்டு, ராமர் எந்தக் கோவிலில் என்ஜினீயரிங் படித்தார் எனக் கேட்க உனைத் தவிர வேறு எவரால் முடியும்?

ஆட்சியில் அமர்ந்து நீ சாதித்தவற்றைப் பட்டியலிடுவதில் எங்களுக்கு பெருமை இல்லை…

இந்திராகாந்தியின் அவசரநிலை அறிவிப்பால் நாடே அடங்கி ஒடுங்கிக் கிடந்த நேரம், தனி ஒருவனாக எதிர்த்து நின்று ஆட்சியை இழந்தாயே… அதுதான் எங்களுக்கு பெருமை…

இடஒதுக்கீட்டிற்கான மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல் படுத்தியதற்காகவும், அத்வானியின் ரதயாத்திரையைத் தடுத்ததற்காகவும் பிரதமர் பதவியை இழந்த வி.பி.சிங்கை தமிழகத்திற்கு வரவழைத்து சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தாயே அதுதான் எங்களுக்கு பெருமை…

இனத்துக்கும், மொழிக்கும் எப்போதெல்லாம் இடையூறும், அவதூறூம் நேர்கிறதோ, அப்போதெல்லாம், தந்தை பெரியார் தந்த அறிவாயுதத்தை எடுத்து சுழற்றி, பகைவர்களை சுற்றி நில்லாதே போ என விரட்டி அடிப்பாயே, அந்த வீரம்தான் உடன் பிறப்பாகிய எங்களுக்கு பெருமை…

உடன்பிறப்பே… அங்கே மாநாடு.. இங்கே பொதுக்கூட்டம்… அண்ணன் அழைக்கிறேன் வா… என்று முரசொலியில் எங்களை நோக்கி, உனது முத்தான தமிழால் சொடுக்கிட்டு

அழைப்பாயே… அது எங்களுக்கு பெருமை…

உலகுக்கே பொதுமறை தந்து வான்புகழ் கொண்ட வள்ளுவனுக்கு சென்னையில் கோட்டம் கண்டாயே… அது எங்களுக்கு பெருமை…

கன்னியாகுமரி முனையில் விண்ணை முட்டும் உயரத்தில் அவனுக்கு சிலை அமைத்தாயே அது எங்களுக்கும், எமது இனத்துக்கும் பெருமை…

கலைஞர் அழைத்துவிட்டார்… இனி நமக்கு களைப்பேது… ஓய்வேது என தோள்கள் திமிற, மீசை முறுக்கி புறப்படும் திராவிட காளையரை வரவேற்று, உரையின் தொடக்கத்தில், உயிரினும் மேலான என் உடன் பிறப்பே என விளிப்பாயே… அது… இவை எல்லாவற்றையும் விட எமக்குப் பெருமை…

கழகத்தின் அடிமட்டத் தொண்டர்களாகிய உன் உடன்பிறப்புகள் குறித்து நீ அறியாததா…

பதவிக்காகவோ, புகழுக்காகவோ, அதிகாரத்திற்காகவோ இந்த இயக்கத்தில் நாங்கள் இணைந்திருக்கவில்லை.

பெரியாரின் கருத்தில் மயங்கி, அண்ணாவின் பேச்சில் மனதைப் பறிகொடுத்து, தமிழ்ச் சமூகத்தின் ரத்த ஓட்டமான திராவிட முன்னேற்றக் கழகமெனும் கொள்கை மணிமண்டபத்தில் குடியிருந்த நாங்கள், உனது கனித்தமிழுக்கு அடிமையாகிக் கிறங்கி நின்றோம்…

ஒவ்வொரு நாளும் இருள் கிழித்து உதயமாகும் சிவப்புச் சூரியனாக, சிந்தனைக் கோடுகள் நெற்றியில் துலங்க, அழகிய பல்வரிசை பளீரிடும் உனது சிரிப்பில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொன்ன அழகின் சிரிப்பை அல்லவா கண்டு மகிழ்ந்தோம்…

வேலும், வாளும், வில்லும் கொண்டு போராடிய வீரம் செறிந்ததுதான் தமிழினம் என்றாலும், நவீன உலகின் எதிரிகளை வீழ்த்துவதற்கு, அறிவாயுதமே அவசியத் தேவை என்பதை, அய்யா வழியில் நின்று, அண்ணா சொன்னதை உணர்ந்து, எளிய வியூகங்களை எங்களுக்கு வகுத்துத் தந்த ஏந்தலல்லவா நீ… இல்லாவிட்டால், எங்களது உரிமைப் போராட்டம் அனைத்திற்கும் இந்தியப் பேரரசு, தீவிரவாதப் பட்டம் சூட்டி, எமைத் தீயிலல்லவா இட்டுப் பொசுக்கி இருக்கும்.

மூன்றாமுலகத்தின் சூழல் என்பது, ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கான போராட்டத்தை அறிவார்ந்த அறவழியில் எடுத்துச் செல்ல வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது என்று, அண்ணா உணர்த்திய உண்மையை அவ்வப்போது எங்களுக்கு பல்வேறு வகைகளிலும் எடுத்துரைத்து வந்த இனிய தலைவன் அல்லவா நீ…

திராவிடம் என்பதும், தமிழ்த் தேசியம் என்பதும் பெயர்களில் மட்டுமே வேறுபட்டவை என்பதையும், இன உரிமைக்கான போராட்ட வடிவங்கள் என்ற வகையில், இரண்டின் இலக்கும் ஒன்றுதான் என்பதையும் 15 ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் தணிகைச்செல்வன் கவிதைத் தொகுதியை வெளியிட்டுப் பேசிய விழாவில், எமக்கு புரியும்படி அறிவுறுத்திய அறிவாசான் அன்றோ நீ…

மூன்றாம் உலக சூழலில், குடியாட்சி என்பது கூட்டாட்சி முறையின் அடிப்படையில் மட்டுமே இயங்க முடியும் என்ற உண்மையை உணர்ந்ததால் தானே, அறிஞர் அண்ணா கத்தியைத் தீட்டாதே தம்பி புத்தியைத் தீட்டு என எங்களுக்கு பாடம் எடுத்தார். திராவிட நாடு கோரிக்கையை திமுக கைவிட்டது அண்ணாவின் அத்தகைய தொலைநோக்குப் புரிதல் காரணமாகத் தானே… அதிகார அடுக்கு முறைக்குள் ஜனநாயக முறையில் பங்கேற்று நமக்கான உரிமைகளை இயன்றவரை வென்றெடுப்போம் என்பதுதானே அண்ணாவின் அரசியல் அரிச்சுவடி.

சென்னை ராஜதானி தமிழக அரசானதும், சாதி மறுப்புத் திருமணம் சட்ட அங்கீகாரம் பெற்றதும் போன்றவற்றை அதனால்தானே கத்தியின்றி, ரத்தமின்றி நம்மால் பெற முடிந்தது.

இத்தகையதொரு அற வழியைத்தானே, அண்டை  மண்ணில் போராடி வந்த நமது தொப்புள் கொடி உறவுகளாம் ஈழத்தமிழர்களுக்கு எப்போதும் அண்ணா காலத்தில் இருந்தே திமுக எடுத்துரைத்து வந்தது… சகோதர யுத்தம் வேண்டாம் என நீயும் அந்த வழிமுறையைத் தானே அவ்வப்போது அறிவுறுத்தி வந்தாய்… சர்வதேச சமூகத்தின் சூழ்ச்சியால் ஈழத்தமிழர்களின் போராட்டம் முறியடிக்கப் பட்ட நேரத்தில், அதனைத் தடுக்க முடிந்தவரை முயன்று தோற்ற உன்னை இன்றளவும் பலரும் பழித்தும், இழித்தும் பேசி வருவதுதான் இதயத்தில் ஆறாத புண்ணாக எமக்கு வலிக்கின்றது.

போகட்டும். போற்றியவர்களை விட தூற்றியவர்களே அதிகம் என்பதுதானே தலைவா உனக்கான தனி அடையாளமே… இனத்துக்கான எந்தப் பணியையும் நீ விட்டுவைக்கவும் இல்லை, விட்டுக் கொடுக்கவும் இல்லை என்ற உண்மை, உனது உடன்பிறப்புகளான எங்களுக்கு தெரியும். எங்களிடமிருந்து அதனை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ, பறிக்கவோ முடியாது.

எல்லாம் சரி. கருணாநிதியை ஒழிக்காமல் ஓயமாட்டோம் என்றவர்களெல்லாம் ஒழிந்து போனார்களே தலைவா… இப்போது பார்த்து நீ எங்கே போனாய்?

யார் யாரோ ஏதேதோ பேசுகிறார்கள். நேற்று முளைத்த காளான்கள் கதை பேசுகின்றன. அவற்றில் புழுத்த புழுக்கள் கூடி நின்று ஆரவாரிக்கின்றன. அதையெல்லாம் அரசியல் என இனத்தின் அழிவை எதிர் நோக்கி இருக்கும் ஒரு கூட்டம் உசுப்பேற்றி விடுகிறது.

இந்த நிலையில் நீ எங்கே போனாய். இதுவரை வழிகாட்டினாய். இனி நாங்கள் போகும் வழி எது…? அதைக் காட்ட வேண்டாமா?

திராவிடத்தை விழுங்க ஆரியம் தருணம் பார்த்துக் காத்திருக்கிறது. அரணாகவும், கேடயமாகவும் நின்று அதைத் தடுத்து வந்த நீ எங்கே இருக்கிறாய் தலைவா?

தமிழக அரசியலின் தீராத பாடுபொருளே…

தவிர்க்க முடியாத வரலாற்று பேராளுமையே…

தமிழினத்தின் தலை நிமிர்வே…

ஆரியத்தின் சூழ்ச்சிகளை அதே வழியில் நின்று வென்றெடுத்த வீரியமே… எமை உசுப்பும் உனது சொல்லெங்கே…

உடன்பிறப்பே என்ற உயிர் உலுக்கும் அழைப்பெங்கே…

அகமும், புறமும் எமக்கு சொல்லிச் சொல்லிச் சுழன்ற, சுந்தரத் தமிழ் துள்ளும் அந்த நாவெங்கே…

அள்ளு தமிழ் சிலம்பு சொன்ன பூம்புகாரை, துள்ளு தமிழில் வார்த்தளித்த உன் துடிப்பெங்கே…

வெல்லடா நீ என்று எமை தூண்டி விட்டு, நாங்கள் களமாடும் காட்சி கண்டு புன்னகைக்கும் முகமெங்கே…

மூளும் இருள் அகல… மூடப் பகை மிரள… இருள் கிழித்து அன்றாடம் எழுந்து வரும் அந்தச் சூரியன் எங்கே… எங்கே… எங்கே…?

(கடிதம்: செம்பரிதி, nadappu.com)