தஞ்சை:

ளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில்  திமுகவினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில்  ஆய்வு நடத்தினார். இது மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் கடலூரில் கழிவறையை ஆய்வு செய்தபோது கீற்று மறைப்பில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை ஆளுநர் பார்த்ததாக சர்ச்சை எழுந்தது.

ஆனால் இதை ஆளுநர் மாளிகையும், சம்பந்தப்பட்ட பெண்ணும் மறுத்தனர். கடலூரில் ஆளுநருக்கு விடுதலை சிறுத்தைகள் கருப்புக்கொடி காண்பித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் எம்ஜிஆர் சிலை திறந்து வைக்க  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வந்திருக்கிறார். நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர் குழந்தையம்மாள் நகரில் ஆய்வு செய்தார்.

இந்த நிலையில்  புதிய பேருந்து நிலையத்தில் திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுகவினர் ஆளுநருக்கு கருப்புக் கொடி காண்பித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே ஆளுநர் பொதுமக்களை சந்தித்து குறைகேட்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து தஞ்சையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.