சென்னை,

திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

குப்பைக்கூளங்களால் சூழப்பட்டுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் அரசு நடவடிக்கை எடுத்து சுத்தம் செய்யா விட்டால், திமுகவினரே சுத்தம் செய்வார்கள் என்று அதிரடியாக கூறினார்.

இன்று காலை முதலே ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதியான  கொடுங்கையூர் குப்பை மேடு மற்றும்  அங்குள்ள எழில் நகர், எம்.ஜி.ஆர். நகர் , தண்டையார்பேட்டை நேரு நகரில் உள்ள பக்கிங்காம் கால்வாய் ஐ.ஓ.சி. பஸ் நிலையம், வ.உ.சி. நகர் பூங்கா எதிரில் உள்ள குப்பை கிடங்கு, எண்ணூர் நெடுஞ்சாலையில் தூர் வாரப்படாமல் உள்ள மழை நீர் கால்வாயை பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஏற்கனவே கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வந்த வார்தா புயல் காரணமாக சென்னை கடுமையான பாதிப்புக்கு உள்ளாது அனைவருக்கும் தெரியும். தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கால்வாய்கள் இன்னும் தூர் வாரப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டினார்.

இதுகுறித்து, அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்த பகுதிகளில் உள்ள தி.மு.க.வினர் உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கின்ற நிலையை உருவாக்கிட வேண்டும் என்றார்.

மறைந்த முதல்வர்  ஜெயலலிதா ஏற்கனவே போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று காலையில் இருந்தே பார்வையிட்டு வருகிறேன். இங்கு    குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாத நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் கழிவுநீர் கலந்து வருகிறது. இந்த தொகுதியை ஆட்சியாளர்கள் கண்டும் காணாமல் விட்டிருப்பது கொடுமை யிலும் கொடுமையாக இருக்கிறது.

இந்த தொகுதியில்  இன்னும் ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள தி.மு.க.வினர் சுத்தம் செய்கிற பணிகளில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.