தட்டாஞ்சாவடி தொகுதியில் திமுக போட்டி! புதுவை முதல்வர் அறிவிப்பு

--

புதுச்சேரி:

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள தொகுதில், திமுக போட்டியிடும் என்று  புதுவை முதல்வர் நாராயணசாமி கூறி உள்ளார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக முன்னாள் முதல்வர் ரங்கசாமி கட்சியான என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் ஆனந்த்  இருந்தார். இவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், அசோக் ஆனந்த் மற்றும்  அவரின் தந்தை ஆகிய 2 பேருக்கும் தலா ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதைத்தொடர்ந்து தட்டாஞ்சாவடி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுவை முதல்வர் நாராயண சாமி, தட்டாஞ்சாவடி தொகுதியில் திமுக கட்சி போட்டியிடும் என்றும், அதற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.

செய்தியாள்ரகள் சந்திரபாபு நாயுடு ஸ்டாலின் சந்திப்பு குறித்து கேட்ட கேள்விக்கு, இந்த முயற்சியை வரவேற்பதாக கூறியவர், மதசார்பற்ற அணிகளை இணைக்க சந்திரபாபு நாயுடு நல்ல முயற்சி எடுத்து வருகிறார் என்றும், அவரது  முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும் என்றார்.

மோடி அரசின் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது குறித்த கேள்விக்கு,  பணமதிப்பிழப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி தோற்றுவிட்டார் என்று கூறினார்.

You may have missed