சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததற்கு திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மதுரை மாவட்ட செயலாளருமான மு.க.அழகிரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக வெற்றி பெறாது என்று மு.க.அழகிரி அதிரடியாக கூறினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்தது. இது கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன்,  பணநாயகம் வென்றிருக்கிறது ஜனநாயகம் தோற்றிருக்கிறது என்று கூறினார். திமுக கடந்த முறை வாக்குகள் கூட அதிகம் வரவில்லையே, திமுகவினர் வோட்டு போடவில்லை என்று அர்த்தமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு அதையும் பணம் சாப்பிட்டு விட்டது அங்கே என்று பதிலளித்திருந்தார்.

இதற்கு மு.க.அழகிரியின் மகனான தயாநிதி அழகிரி, தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

அதில், துரைதயாநிதி தி.மு.க வினரே காசுக்கு விலை போனதாக, தி.மு.க வின் முதன்மைச்செயலாளர் துரைமுருகன் கூறியது தி.மு.வின் அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகள் மற்றும் மனதை புண்படுத்துவது போல் உள்ளது. தலைமை என்ன செய்ய போகிறது என்ற கேள்விகளுடன் தி.மு.க தொண்டர்கள். முருகனுக்கு அரோகரா என்று பதிவிட்டிருந்தார்.

இந்த சர்ச்சைகளுக்கிடையே, இன்று ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த மு.க.அழகிரி, பணம் இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியாது. ஆணையம் நிர்ணயித்த தொகையைத்தான் தேர்தலில் செலவழிக்க முடியும் என்று கூறினார்.

மேலும், ஆர்.கே.நகரில் திமுகவின் செயல்பாடு சரியில்லை என்றும், கலைஞர் இரவு நேரங்களில் சென்று கட்சிக்காரர்களின் செயல்களை பார்வையிடுவார் என்று கூறினார்.

ஆனால், ஸ்டாலின் அவ்வாறு இல்லை என்றும்,  வெற்றிப்பாதையில் செல்ல வேண்டும் என்றால் திமுகவில் மாற்றம் தேவை என்ற அவர்,  ஸ்டாலின் உடன் இருப்வர்களின் செயல்பாடுகள் சரியில்லை என்று குற்றம் சாட்டினார்.

ஆர்.கே.நகரில் திமுக டெபாசிட் இழந்துள்ளது. 4 வருடமாக கலைஞர் ஓய்வில் இருந்ததில் இருந்து எந்தவொரு எலக்ஷனிலும் திமுக ஜெயிக்க வில்லை என்றும், புதுசா வந்தவர்களை கட்சியில் சேர்த்துக்கொண்டு, பதவிகளை கொடுத்தால் கட்சி தொண்டன் ஏற்றுக்கொள்வானா என்று கேள்வி எழுப்பினார்.

ஸ்டாலின் ஆக்டிவாக, ஊர்ஊராக சுற்றி வருகிறார் என்ற அவர், அவருடன் இருப்பவர்கள் சரியில்லை என்று குற்றம் சாட்டினார்.

மேலும்,  களத்தில் இறங்கி வேலை பார்த்ததால்தான் தினகரன் வெற்றி பெற்றுள்ளார் என்ற அழகிரி, திமுகவினர் களத்தில் இறங்கி வேலை செய்யவில்லை என்று கூறினார்.

மேலும், திமுகவினரின் வாக்குகளை பணம் சாப்பிட்டதாக துரைமுருகன் கூறுவது தவறு என்ற அழகிரி,  ஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக வெற்றி பெறாது என்றும் அதிரடியாக கூறினார்.

ஆர்.கே நகரில் டெபாசிட் போனதற்கு ஸ்டாலின் காரணம். எனக்கும் அவருக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்சனைகள் வேறு, அரசியல் வேறு. போதிய மேற்பார்வை இல்லாமல் இருக்கும் நிலையில், தி.மு.க.வின் உண்மையான தொண்டர்களை பணத்திற்காக விலை போனதாக கூறுவதா?. ஸ்டாலினுடன் இருப்பவர்களின் செயல்பாடு சரியில்லை. 

வெற்றிப்பாதையில் செல்லவேண்டுமானால் தி.மு.க.வில் தலைமை மாறுதல் தேவை, அனைவரையும் ஒருங்கிணைத்து செல்லும் வகையில் தலைமை இருக்க வேண்டும். 

ஆர்.கே நகரில் பிரபல சின்னங்கள் களத்தில் இருந்த நிலையில், புதிய சின்னத்துடன் தினகரன் சுயேட்சையாக இறங்கி வெற்றி பெற்றுள்ளார். தி.மு.க மற்றும் அ.தி.மு.க மீதான வெறுப்பே அவரை வெற்றி பெறச்செய்துள்ளது. 
 
தேர்தலில் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பது என்றாலே திருமங்கலம் பார்முலா என்று கூறுகின்றனர். திருமங்கலம் பார்முலா என்பது கட்சி தொண்டர்கள் கடுமையாக உழைத்ததுதான். பணம் மட்டும் தேர்தலில் வெற்றிபெற போதாது. 

தேர்தலில் யார் ஜெயித்தாலும் பண நாயகம் வென்றது, ஜனநாயகம் தோற்றது என்று கூறுவது இயல்பானது. தி.மு.க வெற்றிபெற வேண்டுமானால் புதிதாக வருபவர்களுக்கு பதவி கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

துரோகம் இழைத்தவர்களை நீக்கிவிட்டு பழைய உண்மையான தொண்டர்களுக்கு பதவி அளிக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.