சென்னை: இன்னும் 8 மாதங்களில் ஆளுங்கட்சியாக திமுக மாறும் என கட்சி பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டிஆர் பாலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

துணை பொதுச் செயலாளர்களாக பொன் முடியும், ஆ ராசாவும் நியமிக்கப்பட்டனர். பொதுக்குழுவில் மொத்தம் 13 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:

நான் திமுக தலைவராக உள்ளபோது பொதுச் செயலாளராக துரைமுருகன் இருப்பது பெருமை, திமுகவின் போர்வாள் என போற்றப்பட்டவர். துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் கட்சியில் படிப்படியாக உயர்ந்து தற்போதைய நிலையை எட்டி உள்ளனர்.

9 முறை சட்டசபைக்கு சென்றுள்ள துரைமுருகன், அவையில் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருகிறார். துரைமுருகனின் கனிவும், டி.ஆர்.பாலுவின் கண்டிப்பும் திமுகவின் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும். அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோரது பொறுப்பு துரைமுருகன் தோளில் சுமத்தப்பட்டுள்ளது. பல்வேறு பதவிகளை வகித்த அவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும்.

திமுகவின் போர்வாளாக திகழ்கிறார் டி.ஆர்.பாலு. கருணாநிதிக்காக உயிரையும் கொடுக்கக்கூடிய திமுகவின் போர்வாள் டி.ஆர்.பாலு. மிசா காலத்தின் போது கைதாகி எங்களுடன் சிறையில் இருந்தவர். 6 முறை மக்களவை எம்.பி, 3 முறை மத்திய அமைச்சராக இருந்தவர். வெட்டி வா என்றால் கட்டி வரக்கூடியவர் டி.ஆர்.பாலு என்று கருணாநிதி குறிப்பிடுவார்.

ராசா 5 முறை எம்.பி. பொன்முடி 5 முறை எம்.எல்.ஏ என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ராசாவும், பொன்முடியும் திமுகவின் அடிப்படை கொள்கைகளில் உறுதியாக உள்ளவர்கள். கட்சி வளர்ச்சிக்கு தங்களது மொத்த திறமையும் பயன்படுத்துங்கள். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. 5 மாதங்கள் கொரோனாவால் கழிந்து விட்டது . இனி கட்சியினர் விரைந்து செயல்பட வேண்டும். நாம் தான் ஆட்சிக்கு வர போகிறோம் என்று பேசினார்.