டில்லி,

மிழகத்தில் நடைபெற்று வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், திமுக தலைமையில், எதிர்க்கட்சியினர் குடியரசு தலைவரை சந்தித்து மனு கொடுத்தனர்.

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்ததை தொடர்ந்து டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 19 எம்எல்ஏக்கள் தனியாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் கவர்னரை சந்தித்து, முதல்வரை மாற்ற மனு கொடுத்தனர்.

அதுபோல திமுக மற்றும் எதிர்க்கட்சியினரும், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவை சுட்டிக்காட்டி, எடப்பாடி தலைமையிலான அரசு , சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், ஆளுநர் வித்யாசாகர் ராவ் அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று கைவிரித்து விட்டார்.

அதைத்தொடர்ந்து இதுகுறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். அவர்களுக்கு இன்று காலை 11 மணிக்கு சந்திக்க நேரம் ஒதுக்கினார் ஜனாதிபதி.

அதைத்தொடர்ந்த இன்று காலை 11 மணி அளவில் டில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை எதிர்க்கட்சியினர் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது, திமுக எம்.பி., கனிமொழி தலைமையில் திமுகவை சேர்ந்த எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி உள்பட மேலும் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உடன் காங்கிரஸ் ஆனந்த் சர்மா, எம்எல்ஏ விஜயதரணி உள்பட, கம்யூனிஸ்டு தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா மற்றும் முக்கிய நிர்வாகிகள் குடியரசு தலைவரை சந்தித்து மனு கொடுத்தனர்.

அப்போது, தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து விவாதித்தாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னருக்கு உத்தரவிடவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.