திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மதுராந்தகத்தில் சாலை மறியல் – கைது

ஸ்டாலினுடன் சேர்ந்து புதுமண தம்பதியும் மறியல் போராட்டம்

காஞ்சிபுரம்:

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று  மதுராந்தகம் அருகே  நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்குபெற்று விட்டு, அங்கேயே  கூட்டணி கட்சியினருடன் இணைந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக, காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சியினர் தமிழகம் முழுவதும் சாலைமறியல், ரெயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தில் நடைபெற்ற  திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வருகை தந்தார்.  திருமண நிகழ்ச்சியை முடிந்துவிட்டு மதுராந்தகம் பகுதியில் திமுக உள்பட கூட்டணி கட்சியினருடன் இணைந்து துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டார்.

இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினர் மற்றும் எதிர்கட்சிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுடன் ஸ்டாலின் நடத்தி வைத்த திருமண தம்பதிகளும் கலநதுகொண்டனர்.  போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டதால், அவர்களைக் கட்டுப்படுவத்துவதில் போலீசார் திணறினர்.

வாகனங்களைக்கூட நகர்த்த முடியாத நிலையில் போலீசார் திணறி வருகின்றனர். இந்த நிலையில், மு.க.ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். மேலும் ஏராளமான திமுகவினரையும் போலீசார் கைது செய்தனர்.