தேர்ந்தெடுத்து களமிறங்கி அசத்திய திமுக..!

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை, திமுக சில சிக்கலான தொகுதிகளை சவாலுடன் தேர்ந்தெடுத்து சொல்லி அடித்துள்ளது என்றே கூறலாம்.

கடந்த 2004ம் ஆண்டில் எடுக்காத ரிஸ்க்கை கூட இப்போது எடுத்து சாதித்திருக்கிறது.

சேலம், தருமபுரி, தென்காசி, பொள்ளாச்சி மற்றும் ஈரோடு போன்ற தொகுதிகள் அதிமுகவுக்கு வலுவான அடித்தளம் உள்ள தொகுதிகள் என்று கூறப்படுவதுண்டு.

மேலும், திருவள்ளூர், திருப்பூர் மற்றும் தேனி மற்றும் இராமநாதபுரம் போன்ற தொகுதிகளும், அதிமுகவுக்கு வலுவான தொகுதிகள் என்ற பட்டியலில் வருபவையே.

இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியான சேலம், வலுவான சாதியப் பின்புலத்துடன் அன்புமணி களமிறங்கிய தருமபுரி, சிக்கலான சாதிய சமன்பாடுகள் நிலவும் தென்காசி, அதிமுகவின் கொங்கு மண்டல கோட்டைகளான ஈரோடு மற்றும் பொள்ளாச்சி ஆகியவற்றில் தானே சவாலுடன் களமிறங்கி, எதிர்த்தவர்களை அடித்து வீழ்த்தியுள்ளது திமுக.

இவற்றிலேயே, சேலம் மற்றும் தருமபுரியில் வென்றதுதான் திமுகவின் சாதனை வெற்றிகள்.