சென்னை:

திமுக அறிவித்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான கோலம் எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் தீயாய் பரவி வருகிறது. சமூக வலைதளமான டிவிட்டரிலும் டிரெண்டிங்காகி வருகிறது.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறத. இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக மக்கள் வீட்டு வாசலில் No CAA No NRC என எழுதப்பட்ட கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

அதைத்தொடர்ந்து, திமுக மகளிர் அணியினனரும்,  தங்களது வீட்டு வாசலில்,  No CAA No NRC வாசகத்துடன்  கோலம் போட வேண்டும் வேண்டும்  என்று கனிமொழியும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் திமுகவினர் கோலம் வரைந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். நேற்று சென்னை பெசன்ட் நகரில்,  சில வீடுகளின் முன் வேண்டாம் என்ஆர்சி, வேண்டாம் சிஏஏ என பெண்கள் கோலமிட்டிருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கோலம் வரை 6 பேரை போலீசார்  கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பின்னர் விடுவித்தனர்.

இதற்கு திமுக தலைவர், ஸ்டாலின, கனிமொழி, வைகோ உள்பட தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை திமுக தலைவர் மறைந்த கருணாநிதி, ஸ்டாலின் வசிக்கும் கோபாலபுரம் வீடு, கனிமொழி வீடு, திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு உள்பட திமுக நிர்வாகிகள் வீடுகளில் மீண்டும் கோலம் வரையப்பட்டு தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

தமிழக காங்கிரஸ் நிர்வாகி அமெரிக்கை நாராயணன் வீட்டின் முன்பு கோலம் வரையப்பட்டுள்ளது. “வேண்டாம் சி.ஏ.ஏ” என வரையப்பட்டிருந்த அந்த கோலத்தை, அமெரிக்கை நாராயணன் தன் கைப்பட வரைந்தது எதிர்ப்புகளை பதிவு செய்தார்.

அதுபோல, சென்னை முகப்பேரில் திமுக மகளிரணியினர் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த கோலம் எதிர்ப்பு போராட்டம் சென்னை மட்டுமின்றி, கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் ஏராளமானோர் கோலம் வரைந்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

CAA எதிர்ப்பு தெரிவித்து கோலம் வரைந்துள்ள ஏராளமானோர், தங்களது வாசலில் வரையப்பட்ட கோலங்களை சமூக வலைதளங்களில்  பகிர்ந்து வருகின்றனர். இதனால் #DMKKolamProtest என்ற ஹேஷ்டேக்  சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோலம் போராட்டம் டிவிட்டர் வலைதளத்தில் டிரெண்டிங்காகி உள்ளது.