(பைல் படம்)

சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில், மத்திய அரசு மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் தமிழக அரசை வலியுறுத்தினார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. 4 நாட்கள் மட்டுமே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கூட்டத்தொடர் கடைசி நாளான இன்றுடன் முடிவடைய உள்ளது.

இன்று காலை கூட்டம் தொடங்கியதும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசினார். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரத்தில் அமைக்க வாய்ப்பில்லை மத்திய அமைச்சர்   நிதின்கட்கரி மற்றும்  மத்திய நீர்வளத்துறை அமைச்சர் யூ.பி.சிங் கூறி உள்ளனர்.

ஆகவே, பாராளுமன்றத்தில்,  மத்திய அரசுக்கு எதிராக அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், உச்சநீதி மன்ற உத்தரவுபடி  6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்றும்  தமிழக அரசை வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள அவகாசம் முடிய இன்னும் 8 நாட்கள் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

மார்ச் 29 க்குள் காவிரி வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால் அனைவரும் கூடி   பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிப்போம்  என்று கூறினார்.

தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.