திமுகவின் மாநில சுயாட்சி மாநாடு: ராகுல்காந்திக்கு அழைப்பு

டில்லி:

திமுக நடத்த உள்ள  மாநில சுயாட்சி மாநாட்டில் கலந்துகொள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர்  ராகுல்காந்தியை, திமுக சார்பில்,  திமுக எம்.பி. திருச்சி சிவா நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தார்.

மாநில சுயாட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாடு என்ற தலைப்பில் வருகிற ஆகஸ்ட் 30ம் தேதி சென்னையில் திமுக சார்பில் பிரமாண்ட மாநாடு நடத்தப்பட உள்ளது.

இந்த மாநாட்டில் அகில இந்திய தலைவர்களான  ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டில்லி முதல்வர்  கெஜ்ரிவால், சரத்பவார், உமர் அப்துல்லா, மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்பட பலருக்கும்  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முக்கிய தலைவர்களை திமுக எம்.பி.க்கள் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து அழைத்து வருகின்றனர். சமீபத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சென்று அழைத்த நிலையில், இன்று திருச்சி சிவா அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

மற்ற தேசிய கட்சி தலைவர்கள் உள்பட முக்கிய தலைவர்களை திமுக எம்.பி.க்கள் நேரில் சந்தித்து  அழைப்பு விடுத்து வருகின்றனர்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதியஜனதா கட்சியை  எதிர்கொள்ளும் வகையில்,  அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் திமுக இந்த மாநாட்டை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.