சென்னை:

விரைவில் டிஎம்எஸ்- வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் சர்வீஸ் இயக்கம் தொடங்கும் என்ற மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தெரிவித்து உள்ளார்.

தற்போது வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடை பெற்று வருவதாகவும், டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை இடையேயான 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சோதனை ஓட்டம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.  சோதனை ஓட்டத்துக்கு பின் இயக்கம் குறித்து அறிவிக்கப்படும்  என்றும் தெரிவித்து உள்ளார்.

அதிகரித்து வரும் சென்னை மக்களின் பயன்பாட்டுக்காகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் மெட்ரோ ரயில் சேவை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சென்னை சென்ட்ரல் முதல் ஆலந்தூர் வரை ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்தக்கட்டமாக பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன.

வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை 23 கிலோ மீட்டர் தூரத்திற்கும் சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 22 கிலோ மீட்டர் தூரத்திற்கும் 2 வழித் தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடையும்தருவாயில் உள்ளது.

தற்போது சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரையிலும், தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.சில் இருந்து விமான நிலையம் வரையிலும் மெட்ரோ சேவை செயல்படுத்தப்படுகிறது. வண்ணாரப் பேட்டை- டி.எம்.எஸ். இடையே சுரங்கப்பாதையில் ரெயில்களை இயக்குவதற்காக பணிகள் கடந்த சில மாதங்களாக மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை இடையேயான 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதுகாப்பு கமி‌ஷனர் மனோகரன் தலைமையிலான அதிகாரிகள் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் பார்த்தனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மனோகரன், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அதைத்தொடர்ந்து  வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே ரயில் சேவை தொடங்கி வைக்கப்படும் என்று கூறினார்.

இன்னும் 2 வாரத்திற்குள் இந்த வழித்தடத்தில் புதிய சேவை தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.