உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அலிபாபா நிறுவனத்தை நிறுவிய ஜாக் மா மாயமாகிப்போனதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரபரக்கின்றன. இன்றைய தேதியில் இவரது சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் நான்கரை லட்சம் கோடி.

20 ஆண்டுகளுக்கு முன் ஜாக் மா-வால் துவக்கப்பட்ட அலிபாபா என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனம் பந்தயத்தில் ஓடும் குதிரையாக அவருக்கு பொருளை வாரி குவித்தது.

அதன் காரணமாக பல இணை நிறுவனங்களை துவக்கிய ஜாக் மா, வேறு பல நிறுவனங்களிலும் முதலீடு செய்துவந்தார்.

ஆன்லைன் வர்த்தகத்திற்கு முக்கிய காரணியாக விளங்கும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை நிர்வகிக்க அலி-பே என்ற நிறுவனத்தை 2014 ல் துவக்கினார், இன்று சுமார் 100 கோடி பேர் இந்த செயலி மூலம் பண பரிவர்த்தனை செய்துவருகிறார்கள்.

அலி-பே வை தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனை அதிகரிக்க, பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை அணுகிய ஜாக் மா அவர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கடன் பெற்று தந்தார்.

இந்த சேவைக்காக, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து இவரது ‘ஆண்ட்’ குழும நிதி மேலாண்மை நிறுவனங்கள் கட்டணம் பெற்று வந்ததோடு ஜாக் மா-வுக்கு தங்கள் நிறுவனங்களில் கணிசமான பங்குகளையும் வழங்கியது.

இவ்வாறு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வகையில் பணம் குவித்து வந்த ஜாக் மா-வை சீனா மட்டுமல்ல உலகமே ‘ரோல்-மாடலாக’ முன்னிலை படுத்தியது.

அலிபாபா நிறுவனம் வாடிக்கையாளர் தரவுகளை நிதி நிறுவனங்களிடம் அளித்து பணம் கொழிக்கும் விவகாரம் சர்ச்சையானதை தொடர்ந்து இந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கடந்த அக்டோபரில் முஸ்தீபு காட்டியது சீன அரசு.

சீன அரசு எடுக்கும் நடவடிக்கை போதுமானதாக இல்லையென்றும், கடந்த பல ஆண்டுகளாக அலிபாபா நிறுவனத்தையும் அதன் நிறுவனரையும் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றதில் மட்டுமல்ல, அவரது சொத்து குவிப்பிலும் அரசுக்கு பங்கு இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்தது.

மேலும், கோடான கோடி வாடிக்கையாளர்களின் தரவுகளை சீன ரிசர்வ் வங்கிக்கு வழங்காமல் டிமிக்கி கொடுத்து வரும் ஜாக் மா, தனது நிறுவனங்களின் வாடிக்கையாளருக்கு தன் சொந்த பணத்தில் இருந்து கடன் வழங்க வேண்டும் என்ற கருத்தையும் கூறிவந்தது.

சீனாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜாக் மா, உலகம் வேறு நிலையில் முன்னேறிக் கொண்டிருக்கையில் சீன அரசு இன்னும் பழமை வாதத்தில் மூழ்கி இருக்கிறது என்று கருத்து தெரிவித்தார், இது ஜி ஜின்பிங் அரசை மேலும் உசுப்பேற்றியது.

இதனை தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களாக ஜாக் மா-வின் குரல் ஒடுங்கியதோடு, அவரையும் பொதுவெளியில் காணவில்லை என்று பரபரத்தது உலகம்.

இந்நிலையில், சீன செய்தி நிறுவனங்கள், அவர் அரசின் கண்காணிப்பில் உள்ளதாக செய்தி வெளியிட்டிருக்கின்றன, கம்யூனிச சீனாவில் அரசின் கண்காணிப்பு என்பது வீட்டு காவல், தடுப்பு காவல் அல்லது கைது என்ற பொருளில் பார்க்கப்படுகிறது.

உலகின் ஒட்டுமொத்த வணிகத்தையும் தன் அலிபாபா எனும் ஆன்லைன் நிறுவனம் மூலம் கட்டுப்படுத்தி வந்த ஜாக் மா சீனாவில் என்ன ஆனார் என்பது வெளிச்சத்திற்கு வராத விவகாரமாகவே உள்ளது.